தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவால் கேள்விக்குறியாகும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் – தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகள் ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மீதமிருக்கும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மண்டலங்களிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்து சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான ஊதியம், பணி நேரம், விடுமுறை உள்ளிட்டவை கிடைக்காமலும், அரசு நிர்ணயித்த ஊதியத்தை முழுமையாகப் பெற முடியாமலும் தூய்மைப் பணியாளர்கள் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், தற்போது, தூய்மைப் பணியை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைப்பதால் தங்களுக்கான பணி பாதுகாப்பும், ஊதியமும் கேள்விக்குறியாகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 281 முதல் 285 வரையில் வாரம் ஒரு நாள் விடுமுறை, பணி நிரந்தரம், ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய திமுக, தற்போது தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களுக்கும் இளைக்கும் அநீதியாகும். வருடத்திற்கு ஒருமுறை அருகில் அமர்ந்து உணவு அருந்துவது போலப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் கண்களுக்கு, வாழ்வாதாரத்திற்காக வருடந்தோறும் நடைபெறும் தங்களின் போராட்டம் தெரியவில்லையா எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு: சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைவுப்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்களுக்கு, அந்தந்த கழக மாவட்டத்திற்குட்பட்ட மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். -டிடிவி தினகரன், கழக பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் அம்மா ஆகிய ஆளுமைகளின் பேரன்பிற்குரியவராகத் திகழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் புதல்வர் திரு.மதிவாணன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.மதிவாணன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.