கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்த அவசரம் காட்டும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து, தங்களின் வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்து லட்சக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் எனும் தனியார் நிறுவன கார்பந்தயத்தை வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது புயல் பாதிப்பில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை கடும் கோபமடையச் செய்திருக்கிறது. உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி உடுத்த உடையின்றி என எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி சிரமத்திற்குள்ளாகியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகம், மக்கள் வரிப்பணமான 40 கோடி ரூபாயை செலவு செய்து கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் என்ன ? கார்பந்தயம் நடத்த இருங்காட்டு கோட்டையில் மைதானம் இருக்கும் போது ஓமந்துரார் அரசு மருத்துவமனை, அண்ணா சாலை, துறைமுகம் என பரபரப்பாக இயங்கும் சாலைகளை மறித்து தனியார் கார்பந்தயத்தை நடத்தி இடையூறு ஏற்படுத்துவது தான் அரசின் சாதனையா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறும் திமுக அரசு, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை தவிர்க்கும் வகையில் கார் பந்தயத்தை ரத்து செய்வதோடு, கனமழையால் பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழக அரசையும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

“மக்களால் நான் மக்களுக்காகவே நான்” எனும் தாரக மந்திரத்தை தன் வாழ்க்கையாக கொண்டு நாடு போற்றும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று. அடக்குமுறைகள் ஆயிரம் வழியில் வந்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்கொண்ட அம்மா அவர்களின் வழியில் பயணித்து அவரின் லட்சியங்களை மீட்டெடுப்பதோடு, தீய சக்தியையும், துரோகக் கூட்டத்தையும் அடியோடு அகற்ற அம்மா அவர்களின் நினைவுநாளில் உறுதியேற்போம்.

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னை நோக்கி இன்றே புறப்பட இருப்பதை நான் அறிவேன். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையாலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையாலும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களின் பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மாறாக, அவரவர் வசிக்கும் பகுதிகளில் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி, துரோக கூட்டத்தை அகற்றி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைக்க உறுதியேற்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.