பத்திரப்பதிவுத்துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு – ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றும் முத்திரைத் தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மெண்ட் என 20 வகையான பதிவுகளுக்கான முத்திரத்தாள் கட்டணத்தை தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை பன்மடங்கு உயர்த்தியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தத்தெடுத்தல், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை, சங்கம் பதிவுக்கான கட்டணம் என பெரும்பாலான முத்திரைத்தாள் கட்டணத்தை கடந்த ஆண்டு பன்மடங்கு உயர்த்திய திமுக அரசு, தற்போது சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் பத்திரப்பதிவு கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, வீடு வரைபட அனுமதிக் கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும் உயர்த்தியிருக்கும் திமுக அரசால், ஏழை,எளிய மக்களின் சொந்த வீடு எனும் கனவு முற்றிலுமாக தகர்ந்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் மக்களின் மீது சுமையை ஏற்றாமல் பத்திரப்பதிவுத்துறையின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நிகழ்வில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள், கொடிக்கம்பத்தில் ஏற்பட்ட மின்விபத்தில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத்திடல்களை தனியார் வசம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது – விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்கள் மற்றும் 595 பூங்காக்களை தனியார் வசம் குத்தகைக்கு விடுவதற்கான தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விளையாட்டுத் திடல்களை தனியார் வசம் ஒப்படைப்பதோடு, அதனை பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.120 கட்டணமாக நிர்ணயித்திருப்பது ஏழை எளிய வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு அவர்களின் விளையாட்டு எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஷெனாய்நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தை தனியாருக்கு தாரை வார்த்திருப்பதோடு அதற்கான வாடகையையும் உயர்த்தியிருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் மக்கள் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, விளையாட்டுத்திடல்கள், பூங்காக்கள் மற்றும் அரங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் விரோத தீர்மானங்களை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.