சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவா ? – சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை முழுமையாக முடக்கும் ஆபத்தான முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய்ப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை திடீரென குறைக்க முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து அப்பல்கலைக்கழக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் உயர்கல்விக்காகவும், எதிர்கால நலனுக்காகவும் நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றும் பேராசிரியர்களும் அலுவலர்களும் தங்களுக்கான ஊதியத்தையே உரிய நேரத்தில் பெறமுடியாமல் ஒவ்வொரு மாதமும் போராடி வரும் நிலையில், தற்போது அந்த ஊதியத்தையும் குறைக்க முடிவு செய்திருப்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஓய்வுபெறும் பணியாளர்களுக்கான பணப்பலன்களையும் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் ஒருபுறம் ஊதிய உயர்வு கேட்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வரும் நிலையில், மறுபுறம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களும் போராட்டத்தை முன்னெடுத்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே,சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, அப்பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு நிதியை ஒதுக்கி அங்கு நிலவிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சிக்கல்களைக் களையத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கோவை பெரியகடை வீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை – தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்? கோவை மாவட்டம் பெரிய கடைவீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் ஒருவர் உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்கு வந்த நபர், அங்குள்ள காவலர்கள் யாருக்குமே தெரியாமல் முதல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று மறைந்து கொண்டதாகவும், யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை அளித்திருக்கும் விளக்கம் திரைப்படத்தில் வரும் கதைகளுக்கே சவால்விடும் வகையில் அமைந்திருக்கிறது. காவல்நிலையங்களை நாடிவரும் பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துவதும், விசாரணை எனும் பெயரில் அப்பாவிகளை அடித்துத் துன்புறுத்துவது போன்ற செயல்பாடுகளால் காவல்துறை தன் மீதான நற்பெயரை படிப்படியாக இழந்து வரும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இச்சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் காவல்நிலையத்தில் வந்து தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? காவல் உதவி ஆய்வாளர் அறையில் தற்கொலை நடைபெறும் வரை காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுவதோடு, காவல்நிலையம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, காவல்நிலையத்தில் நடைபெற்ற தற்கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதோடு, தற்கொலை நடைபெறும் அளவிற்குக் கவனக்குறைவாகச் செயல்பட்ட காவலர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

திருப்பூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் வெட்டிப் படுகொலை – தன் துறையைச் சார்ந்த காவல் உதவி ஆய்வாளரைப் பாதுகாக்க முடியாத முதலமைச்சரால் பொதுமக்களை எப்படி பாதுகாக்க முடியும்? திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சண்முகவேல் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருவள்ளூர் ஊத்துக்கோட்டையில் மாந்தோப்பு காவலாளி படுகொலை, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இளைஞர் வெட்டிக் கொலை எனக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், அரசியல் கட்சித்தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தை யாருக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புவதோடு, திமுக அரசின் மீதும் அதன் காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. எனவே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.சண்முகவேல் அவர்களின் படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, இனியாவது சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் மீது கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 09.08.2025, சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை, அயனாவரத்தில் அமைந்துள்ள SMB மஹாலில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் சட்டமன்றத்தொகுதியை சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.