சென்னை – எண்ணூர் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் வடசென்னையைச் சேர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அமோனியா கசிவு காரணமாக தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியகுப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிக்ஜாம் புயலால் பொருளாதாரத்தையும், CPCL நிறுவனத்திலிருந்து வெளியேறிய எண்ணெய் கழிவால் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வரும் வட சென்னை பகுதி மக்கள், அந்த பாதிப்பிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது நடந்திருக்கும் அமோனியா கசிவு, அவர்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வாயுக்கசிவால் பாதிப்படைந்திருக்கும் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து உடனடியாக உரிய சிகிச்சை அளிப்பதோடு, வடசென்னையைச் சுற்றியிருக்கும் தொழிற்சாலைகள் அனைத்திலும் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உரிய ஆய்வின் மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்து ஓராண்டாகியும் தற்போது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும். ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய கொடுஞ்செயலுக்கு காரணமான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருப்பதன் மூலம் வேங்கைவயல் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளிலும் இந்த அவலச்சம்பவம் அரங்கேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று ஓராண்டைக் கடந்த நிலையிலும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் மீதான தமிழ்நாடு அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. எனவே, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி வேங்கைவயல் கொடுஞ்செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

எளிமையான வாழ்க்கை மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கு உதாரணமாக திகழும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முதுபெரும் அரசியல்வாதி அன்பிற்குரிய ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நதிநீர் உரிமைகள் மீட்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக இன்றளவும் போராடிக் கொண்டிருக்கும் போராளி ஐயா நல்லகண்ணு அவர்கள் பூரண உடல்நலத்துடன் நூற்றாண்டு கடந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.