சென்னை திருவிடந்தை கடற்கரையில் விதிமுறைகளை மீறி ஆன்மீகம் மற்றும் கலாச்சார மையம் அமைக்க முடிவா ? – மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை கடற்கரையில் 233 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீகம் மற்றும் கலாச்சார பூங்கா அமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மீனவ கிராம மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கடலோர ஒழுங்காற்று மண்டல விதிகளின் படி கட்டுமானங்கள் கட்டுவதற்கு தடை செய்யப்பட்ட (No Development Zone) கடலோரப் பகுதியில் திறந்தவெளி திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் என விதிமுறைகளை மீறி பல்வேறு கட்டுமானங்களை நிரந்தரமாக கட்டுவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பதாகவும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை மீது மீனவ கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆன்மீகம் மற்றும் கலாச்சார பூங்கா எனும் பெயரில் திருவிடந்தை கடற்கரை பகுதிகளில் கடலோர வளங்களை மட்டுமே நம்பி பன்னெடுங்காலமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மீனவ சமுதாய மக்களை வெளியேற்றத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. திருவிடந்தை கடற்கரைப் பகுதிகளில் அதிகமாக காணப்படும் மணல்மேடுகளையும், குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறுகளையும் அகற்றி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால் நிலத்தடி நீருடன் கடல் நீர் ஊடுருவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, மீனவ மக்களுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்தை உடனடியாக கைவிடுவதோடு, இனிவரும் காலங்களில் மீனவ சமுதாய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.