உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனும் பெயரில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.6,100 கோடி ரூபாய் முதலீடுகளும் அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் தமிழக அரசு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. அதே போல கடந்த ஜனவரி மாதம் திமுக அரசு நடத்திய விளம்பர மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், அதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் அந்த மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியதாகவோ, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டதாகவோ தற்போதுவரை எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை. முந்தைய ஆட்சிக்காலத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளை காகிதப் பூ என விமர்சித்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்காலத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் அனைத்தும் மாநிலத்திற்கும் மக்களுக்கும் ஒருபோதும் பயன் தராத விளம்பரப் பூ என்பதை எப்போது உணர்வார்? என பொதுமக்களும் தொழில்துறையினரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு வந்த சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம், எளிதில் அணுக முடியாத அரசு நிர்வாகம், தொழில் தொடங்க அடிப்படை கட்டமைப்பு இல்லாத பெருநகரங்கள், ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் என தங்கள் அரசின் குறைகளை மறைக்க திமுக அரசு நடத்திய விளம்பர மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் வெறும் ஏட்டளவிலேயே இருப்பது கண்டனத்திற்குரியது. எனவே, மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதனால் உருவான வேலைவாய்ப்புகள் குறித்தும், கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் வெள்ளை அறிக்கையை விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாநாடு என்ற பெயரில் மாயத்தோற்றத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றும் முயற்சிகளை இனியாவது கைவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, முதலீடுகள் தேடி வரும் மாநிலமாக தமிழகத்தை மாற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். குவைத் தீ விபத்தில் தமிழர்கள் இருவர் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu

ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று இன்று முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், அவரது தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் தலைமையிலான புதிய அரசு, ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதோடு, அம்மாநில மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் அரசாக திகழ மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

தமிழகத்திற்கான காவிரிநீரை பெறாமல் டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் நம்பிக்கைத் துரோகம் மன்னிக்க முடியாத குற்றம் – கூட்டணி தர்மத்திற்காகவும், சுய நலத்திற்காகவும் மாநில உரிமையை பறிகொடுப்பது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை நடப்பாண்டில் திறக்கப்படாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிரம்பி வழியும் போது, நேரில் சென்று திறந்து வைத்து பெருமை பேசிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நடப்பாண்டுக்கான காவிரி நீரை கர்நாடகாவிலிருந்து கேட்டுப்பெறாமலும், குறுவை சாகுபடியை தொடங்கிய டெல்டா பகுதி விவசாயிகளை கண்டுகொள்ளாமலும், அவர்களின் கோரிக்கைகளையும் காது கொடுத்துக் கேட்க மறுப்பது ஏன் ? உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டி தமிழக காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கூட்டணி தர்மத்திற்காக வெளிப்படையாக கண்டிக்கக் கூட முடியாத முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், மேடைக்கு மேடை மாநில உரிமைகளைப் பற்றி முழங்குவது வெட்கக்கேடானது. கர்நாடக அரசு கடந்த ஆண்டு நிலுவையில் வைத்திருக்கும் சுமார் 100 டி.எம்.சி. தண்ணீரை பெறுவதற்கோ, நடப்பாண்டுக்கான காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் மெத்தனப்போக்கு வரும் காலங்களிலும் தொடருமேயானால், டெல்டா பகுதிகள் வறண்டு நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படுவதோடு விவசாயிகள் அனைவரும் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாகும் அவலநிலை ஏற்படும். எனவே, இனியாவது முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது சுயநலப்போக்கை ஓரம்கட்டி வைத்துவிட்டு தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சட்டரீதியாக உச்சநீதிமன்றத்தை அணுகுவதோடு, காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களின் மூலம் கர்நாடக அரசுக்கு அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தத்தைக் கொடுத்து தமிழகத்திற்கான காவிரி நீரை முழுமையாகப் பெற நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளாவிட்டால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையில் மீண்டும் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சகோதரர் திரு. எல்.முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்துவதோடு, தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும் மத்திய இணையமைச்சர் திரு.எல்.முருகன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.