தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைதூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்வியின் பிறந்தநாள் என்ற நூலுக்காக பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் திரு.யூமா வாசுகி அவர்களுக்கும், விஷ்ணு வந்தார் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் இளம் எழுத்தாளர் லோகேஷ் ரகுமான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தனித்துவமிக்க மொழிநடையால் தமிழ் எழுத்து உலகில் தலைசிறந்த எழுத்தாளர்களாக திகழும் திரு.யூமா வாசுகி மற்றும் திரு.லோகேஷ் ரகுமான் ஆகிய இருவரின் விருதுப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

திருச்சி எஸ்.ஆர்.எம் நட்சத்திர விடுதியை உள்நோக்கத்துடன் மூட முயற்சிக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் 30 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு.பாரிவேந்தர் அவர்களின் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் நடத்தப்படும் நட்சத்திர விடுதிக்குள், காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து காலி செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கான குத்தகை காலத்தை நீட்டிக்கக் கோரி அந்நிறுவனம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஹோட்டலை சட்டவிரோதமாக திமுக அரசு மூட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மாநிலத்தின் உரிமை மற்றும் மக்கள் நலனைப் பற்றி சிறிதும் சிந்திக்காத திமுக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தை இதுபோன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக மட்டுமே வாடிக்கையாக பயன்படுத்தி வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் உத்தரவு வரும் வரை திரு.பாரிவேந்தர் அவர்களின் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் நடத்தப்படும் நட்சத்திர விடுதி மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழக அரசையும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.