ஒரே வளாகத்திலிருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முடிவை மின்வாரியம் கைவிட வேண்டும் – அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஒரே பெயரில் மற்றும் ஒரே வளாகத்தில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைத்து, தனித்தனியாக வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை ஒருவருக்கு மட்டும் வழங்க மின்வாரியம் முடிவு செய்து அதனை அமல்படுத்தியிருப்பதாகவும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே பெயரிலோ அல்லது ஒரே வளாகத்திலோ இருக்கும் மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் மின்வாரியத்தின் முடிவால் சென்னை போன்ற பெருநகரங்களில் வாடைக்கு குடியிருப்போர் வழக்கமாக செலுத்தும் மின்கட்டணத்தை விட மும்மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டே இதுபோன்ற செய்திகள் வெளியான நிலையில், ஒருவரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் அவை ஒன்றாக இணைக்கப்படாது எனவும், அவற்றிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த மின்வாரியமே அதனை மீறுவது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளை கடந்த பின்பும் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பது ஏழை, எளிய நடுத்தர மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் அமைந்துள்ளது. எனவே, ஒரே வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என மின்வாரியத்தையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பயன்பாட்டிற்கு வந்த பதினெட்டே நாட்களில் பழுதடைந்த இலங்கைத் தமிழர் குடியிருப்பு – தரமற்ற குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் மற்றும் சின்னப்பள்ளிக் குப்பத்தில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளின் மேற்கூரை இடிந்து விழுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைத் தமிழர்களுக்காக வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசு கட்டித்தந்த 236 குடியிருப்புகளில் பல குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் அதில் வசிப்போரின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ரூ.12.42 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் வந்து திறந்துவைத்த அமைச்சர்கள், அந்த குடியிருப்புகளின் தரம் குறித்து முறையான ஆய்வு செய்யாதது ஏன்? எனவே, தரமற்ற குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் கட்டப்படும் அனைத்து குடியிருப்புகளின் தரத்தையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.