மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் அவர்களை பற்றிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது. திமுகவை தீயசக்தி எனக்கூறி தான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிப் பொறுப்பிற்கு வரவிடாமல் அடியோடு சாய்த்த புரட்சித் தலைவர் அவர்கள் மறைந்த பின்பும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்பதையே ஆ.ராசா அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சு வெளிப்படுத்துகிறது. தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்து பொதுவாழ்வில் நேர்மையின் அடையாளமாக திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றியும், இதய தெய்வம் அம்மா அவர்களை பற்றியும் விமர்சனம் செய்ய விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் என பெயர் பெற்ற திமுகவினருக்கு என்ன தகுதியிருக்கிறது? ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இன்று சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரை நூற்றாண்டுக்கும் முன்பாகவே அரசியலில் கடைக்கோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் என்பதை திமுகவினர் மறந்துவிடக்கூடாது. புரட்சித் தலைவர் அவர்களின் நேர்மையான வாழ்க்கைக்கு, வாழ்நாள் முழுவதும் அவருக்காக கூடிய கூட்டமே சாட்சியாக இருக்கும் போது, அரசியல் காரணத்திற்காக இழிவுப்படுத்தும் நோக்கிலான பேச்சுக்கள், புரட்சித் தலைவர் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் எந்தவகையிலும் களங்கத்தை ஏற்படுத்தாது என்பதை திமுகவினர் உணர வேண்டும். மறைந்த தலைவர்கள் மீது தொடர்ந்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்து வரும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்கள் இனியாவது தனது தகுதியை அறிந்து பேச வேண்டும். இல்லையெனில் அதற்கான பாடத்தை வரும் தேர்தல்களில் மக்கள் புகட்டுவார்கள் என்பதை எச்சரிக்கையாக விடுக்கிறேன்.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்கள் கடந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, காலம் காலமாக பெற்று வந்த சரண் விடுப்பை (Surrender Leave) காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எதிர்கட்சித் தலைவராக இருந்த போது அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்ட திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்குவது ஏன்? நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதன் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என்ற ஜனநாயக விரோதப் போக்கை தமிழக அரசு இத்துடன் கைவிட வேண்டும். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி – காலிப்பணியிடங்களை உடனடியாக அதிகரிப்பதோடு, குளறுபடி, முறைகேடுகளின்றி தேர்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்விற்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வனக்காவலர் பணியிடங்களையும் சேர்த்து 6,244 பணியிடங்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பாணை, தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. அதே நேரத்தில், முன்னதாக நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஓராண்டுக்கு பின்னர் காலதாமதாக அறிவிக்கப்பட்டதையும், அதில் ஒரே தேர்வு மையத்தில் பயின்ற ஏராளமான தேர்வர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார்களையும் கருத்தில் கொண்டு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வை எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்துவதில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் முழு கவனம் செலுத்திட வேண்டும். மேலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை நினைவாக்கும் வகையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து புதிய அறிவிப்பாணை வெளியிடுவதோடு, நியாயமான முறையில் தேர்வை நடத்தி உரிய காலத்திற்குள் முடிவுகள் வெளியிடுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செயய் வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாத காரணத்தினால் செலவினங்களை சமாளிக்க முடியாமல் கூட்டுறவு சங்கங்கள் திணறி வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டுறவு சங்கங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் மானியத் தொகை மூலமாகவே நியாய விலைக்கடைகளின் வாடகை, பணியாளர்களுக்கு ஊதியம், பணிக்கால பயன்கள், மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவை தொகையில், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.225 கோடியும் தற்போதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதால் நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களின் அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் நியாய விலைக்கடைகள் எவ்வித சிரமமுமின்றி இயங்குவதற்கு உரிய நேரத்தில் மானியத் தொகையை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவிற்கு முரணாக காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில ஆளுநர் அவர்களின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும். காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத் தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.