எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டத்திற்குரியது – இலங்கையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கடந்த 3 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று இரவு மேலும் 19 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக மீனவர்கள் ஒவ்வொருமுறை கைதுசெய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மீனவர்களின் கைதை தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன ? இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த இருநாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்கள் (Crisis Management Centre) அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்ற திமுகவின் 115வது தேர்தல் வாக்குறுதியின் தற்போதைய நிலை என்ன ? எனவே, இனியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் நாடகத்தை தொடராமல், பாரத பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வதோடு, வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் அச்ச உணர்வின்றி மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை அலைக்கழிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது – போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தம், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. பொங்கல் பண்டிகையின் போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி இடமாற்றம் செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் போக்குவரத்துத்துறை ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல், தற்காலிக பணியாளர்களை வைத்தே பேருந்துகளை இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயமும் இருப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் சென்னை மாநகரப் பேருந்து ஒன்றில் பின்பக்க இருக்கையின் தரைதளம் உடைந்து பெண் ஒருவர் விழுந்த சம்பவம் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, வரும் 21 ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தருவதோடு, சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இயங்கும் அரசுப் பேருந்துகளில் உரிய ஆய்வை மேற்கொண்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.