திருப்பூர் அருகே குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவுவிவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தைத் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்திற்கு அருகில் உள்ள சின்னகாளி பாளையத்தில் குப்பைக் கிடங்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இடுவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளின் நிலத்தடி நீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை மாநகராட்சி நிர்வாகம் கைவிடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என அப்பகுதி மக்களும், விவசாயிகளும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், சாலைமறியல், கடையடைப்பு ஆகியவற்றோடு கிராமசபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும், அப்பணிகளைத் தொடர்வதும், எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் மக்களைக்  கைது செய்து அடக்குமுறையை ஏவுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குப்பதிவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு – அடிக்கடி அரங்கேறும் விபத்துக்களைத் தடுக்க அனைத்து அரசுப் பள்ளிக் கட்டடங்களையும் தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன. அங்கன்வாடி மையங்கள் தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை அடிக்கடி பெயர்ந்து விழும் மேற்கூரைகள் மற்றும் பாழடைந்த நிலையில் இருக்கும் வகுப்பறைக் கட்டடங்களின் அவலநிலை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது மாணவர் ஒருவரின் உயிர் பறிபோகக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப்பள்ளிகளில் இதுபோன்று அடிக்கடி இடிந்து விழும் கட்டடங்களால் ஒட்டுமொத்த மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியிருப்பதோடு , ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒதுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது. எனவே, மாணவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதோடு, இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாத வகையில் அனைத்து அரசுப்பள்ளிகளின் கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.