நாடுபோற்றும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படக் கூடிய தலைவர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மற்றும் இதயதெய்வம் அம்மா அவர்கள் குறித்து திமுக அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் தரக்குறைவான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த திமுக தலைவர் திரு. கருணாநிதி அவர்கள் குறித்து மறைந்த திரு. நாஞ்சில் மனோகரன் அவர்கள் எழுதிய “கருவின் குற்றம்” என்ற கவிதை குறித்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய “வனவாசம்” குறித்தும் இதயதெய்வம் அம்மா அவர்களின் தொண்டர்கள் பேச ஆரம்பித்தால் தா.மோ.அன்பரசன் போன்ற திமுகவினர்களில் ஒருவர் கூட வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் ஏற்படக்கூடும். எனவே, தமிழக மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்து மறைந்த தலைவர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் திமுகவினரை பேச விட்டு ரசிக்கும் கீழ்த்தரமான செயல்களை அடியோடு நிறுத்துவதோடு, இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுமாறு திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தென்மாவட்ட மக்களின் ஜீவாதாரமான முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தும் கேரளம் – சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை காரணம் காட்டி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் எம்.பி திரு. ஹிபி ஏடன் அவர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டுவதற்கான நடவடிக்கையை கேரள அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் அதே கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது ஒட்டுமொத்த கேரளமும் புதிய அணையை கட்டுவதில் உறுதியாக இருப்பதை தெளிவு படுத்துகிறது. முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதை அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக் குழுவும், உச்சநீதிமன்றமும் பலமுறை உறுதி செய்த பின்பும், அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி புதிய அணை கட்டும் முயற்சியில் பிடிவாதம் காட்டும் கேரளத்தின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தின் விளைவாக முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இதுவரை செயல்படுத்த முன்வராத திமுக அரசால், தற்போது தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்ட மக்களின் ஜீவாதாராமாக திகழும் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளத்தின் முயற்சிக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்க மறுப்பதும், தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்ற 39 உறுப்பினர்கள் மாநில உரிமை பறிபோவதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதும் தென்மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். எனவே, கூட்டணி தர்மத்தை விட மாநிலமும், மக்களின் நலனுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தங்களை கொடுத்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டும் கேரளத்தின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.