அரசு மருத்துவமனைகளில் இயங்கிவரும் அம்மா உணவங்களை மூட நிர்பந்திக்கும் மருத்துவமனை நிர்வாகங்களின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் அட்சயப் பாத்திரமான அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சென்னை ராஜிவ்காந்தி, எழும்பூர், ஸ்டான்லி, கீழ்பாக்கம் உள்ளிட்ட 7 அரசு மருத்துவமனைகளில் இயங்கிவரும் அம்மா உணவகங்களுக்கு குடிநீர் இணைப்பை துண்டித்து, அவற்றை நிரந்தரமாக மூடுவதற்கு மருத்துவமனை நிர்வாகங்கள் மறைமுக அழுத்தங்கள் கொடுப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அரசு மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அம்மா உணவகங்களை மூட நிர்பந்திக்கும் மருத்துவமனை நிர்வாகங்களின் மனிதநேயமற்ற நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள் என பல்வேறு தரப்பினரின் பசியைப் போக்க தொலைநோக்கு சிந்தனையுடன் இதயதெய்வம் அம்மா அவர்கள் தொடங்கி வைத்த அம்மா உணவகங்களை மூட திமுக அரசு கொடுக்கும் மறைமுக அழுத்தங்கள் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. எனவே, அண்டை மாநிலங்களுக்கும் முன்னோடித் திட்டமாக திகழும் அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, போதுமான நிதியை ஒதுக்கி ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து பயன்பெறும் வகையில் அவற்றின் உட்கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்தி அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பு – திமுக அரசின் மெத்தனப்போக்கால் அடுத்தடுத்து நிகழும் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ? விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன. முறையான உரிமம் பெறாமலும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமலும் இயங்கிவரும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதும், அங்கு பணியாற்றும் அப்பாவி தொழிலாளர்கள் தங்களின் உயிர்களை பறிகொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. பட்டாசு ஆலைகளில் ஒவ்வொரு முறை நிகழும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் போது விபத்துகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், நிவாரண உதவி வழங்குவதோடு தன் கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதும் திமுக அரசின் மெத்தனப் போக்கே அடுத்தடுத்து விபத்துகள் நடைபெறுவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அனைத்து பாதுகாப்பு விதிகளும் முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, இனிவரும் காலங்களில் பட்டாசு ஆலை விபத்துக்களை முற்றிலுமாக தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது – ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை கடந்த பின்பும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மறுப்பது ஏன் ? அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது அரசின் கொள்கை முடிவு எனவும், அது தொடர்பாக பெறப்பட்ட ஆய்வு அறிக்கைகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் சட்டப்பேரவையில் கூறியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கேள்விகள் எழுவதும், அதற்கு எவ்வித முன்னேற்றமும் இல்லாத வகையில் அமைச்சர் அவர்கள் பதிலுரை வழங்குவதும் தொடர்கதையாகி வருவது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு தயாராக இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளை கடந்த பின்னரும் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராதது ஏன்? சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு முன்பாக வழங்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவது எட்டாக்கனியாகவே இருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான கொள்கை முடிவை உடனடியாக வெளியிட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் ஆற்றிய உரை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் அமைந்திருப்பது வரவேற்புக்குரியது. மின் கட்டணத்தை குறைக்கும் சோலார் பேனல் திட்டம், நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை, சிறிய நகரங்களுக்கும் விமான போக்குவரத்து வசதி, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்கள், இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஏற்பாடு, தமிழ்நாட்டில் புதிய தொழிற்பேட்டைகள் என குடியரசுத் தலைவர் அவர்களின் உரையில் இடம்பெற்றுள்ள சிறம்பம்சங்கள், வளர்ந்த இந்தியாவே நம் அனைவரின் லட்சியம் என்பதை மீண்டும் ஒருமுறை பறைசாற்றுகின்றன. நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சுயதொழில் திட்டங்கள், வங்கிகளில் பெண்களின் சேமிப்பை உயர்த்துவதற்கான புதிய முயற்சிகள் அடங்கிய குடியரசுத் தலைவர் அவர்களின் உரை, பெண்கள் மீதான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. அண்மையில் மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வின் வினாத்தாள் கசிந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என குடியரசுத்தலைவர் கூறியிருப்பது தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் பல லட்சக்கணக்காண தேர்வர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. குடியரசுத் தலைவரின் உரையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது வளமான, வலிமையான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அமைந்திருப்பதோடு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டிருக்கும் உயர்ந்த லட்சியங்களை அடுத்து வரும் ஆண்டுகளில் எட்டிப்பிடிக்கும் என்ற நம்பிக்கையையும் மக்களுக்கு அளித்திருக்கிறது.

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் அறிவித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கர்நாடகாவில் உற்பத்தியாகி ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக தமிழகத்திற்குள் நுழையும் பாலாறு, வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயம் மற்றும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகின்றது. பன்மாநில நதிகளில் ஒன்றாக விளங்கும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட மதராஸ் – மைசூர் ஒப்பந்தத்தை மீறுவதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. மாநில உரிமை, மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் தலைவர்களில் ஒருவரான திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள், பாலாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டி லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க முயற்சிப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழ்நாட்டின் வட மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பாலாற்றின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை வலியுறுத்துகிறேன்.

திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் மரணம் – உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரக் கழகச் செயலாளர் திரு. பாலாஜி அவர்களின் மகள் செல்வி. தாரணி அவர்கள், திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. செல்வி. தாரணி அவர்களை இழந்துவாடும் திரு.பாலாஜி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நிலைக் குறைவு என நேற்று பிற்பகலில் தகவல் தெரிவித்த செல்வி. தாரணி அவர்களை உடனடியாக பார்க்கச் சென்ற போது நீண்ட நேரம் காக்க வைத்ததோடு, இரண்டு மணி நேரம் கழித்து செல்வி.தாரணி அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவியின் தந்தை திரு.பாலாஜி அவர்கள் திருச்சி சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே, அந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, செல்வி.தாரணி அவர்களின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.