பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – இனியும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா ? என்பதை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சிந்திக்க வேண்டும். பெண்களை அவமதிக்கும் வகையிலும் சைவம், வைணவம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலுமான தமிழக வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களின் தரக்குறைவான பேச்சு தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவச பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பஸ் என விமர்சித்ததோடு, பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஆணவத்துடன் பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் அமைச்சர் திரு.பொன்முடி அவர்களின் செயல்களை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டும் காணாமல் இருந்ததே, தற்போது மேடை ஏறி பெண்கள் குறித்து இத்தகைய அருவருக்கத்தக்க அளவிற்கு பேசும் துணிச்சலை உருவாக்கியுள்ளது. எனவே, அருவருக்கத்தக்க வகையில் பொதுவெளியில் மகளிர் குறித்து பேசியிருக்கும் வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள், இனியும் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா? என சிந்திப்பதோடு, பெண்கள் எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை தங்களின் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கை திசைதிருப்ப முயன்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு வரவேற்புக்குரியது – மாநிலத்தின் ஆளுநருக்கான அதிகாரத்தை தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாராட்டுதலுக்குரியது. அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல் படியே மாநிலத்தின் ஆளுநர் நடக்க வேண்டும் என்பதோடு, குடியரசுத்தலைவருக்கு இருப்பதை போன்று மசோதாக்களை கிடப்பில் வைப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்பதையும் நேற்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை திசைதிருப்பும் வகையிலும், வழக்கில் சிக்கியுள்ளவர்களை பாதுகாக்கும் நோக்கிலும், வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு மிக மிக அவசியமானது. நேற்று ஒரே நாளில் இருவேறு வழக்குகளில் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியும் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவோர் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை பின்பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணவேந்தர் பதவியிடங்களை உடனடியாக நிரப்பும் அதே நேரத்தில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களை தப்பிக்க முயலாமல் விசாரணையை நேர்மையாகவும், நியாயமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு. குமரி அனந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழ் ஆர்வலராக, தலைசிறந்த இலக்கியவாதியாக, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக, தமிழுக்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றிய திரு குமரி அனந்தனை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.