இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களால் கேள்விக்குறியாகும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் – பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். ஆசிரியர்களிடையே நிலவும் ஊதிய முரண்பாடுகளை களைந்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி பத்தாயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிகளை புறக்கணித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை முதல் அரசுப்பள்ளிகளில் 2024-25 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும், பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் தொடங்க உள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டங்களால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் 311வது வாக்குறுதியான சமவேலைக்கு சம ஊதியம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுவது எப்போது எனவும், கடந்த முறை நடைபெற்ற போராட்டத்தின் போது ஊதிய முரண்பாடை களைய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் நிலை என்ன ? என இடைநிலை ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பள்ளி புறக்கணிப்பு, பள்ளிக்கல்வித்துறை வளாகம் முற்றுகை, காலவரையற்ற உண்ணாவிரதம் என 11 வது நாளாக இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போதுவரை அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இருப்பது அரசுப்பள்ளி மாணவர்கள் மீதான அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது. எனவே, தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடை நிலை ஆசிரியர்களை அழைத்து சுமூக பேச்சுவார்த்தையின் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதோடு, மாணவர்களின் கல்விக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் – நியாய விலைக்கடைகள் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி நிலவிய வறட்சியின் காரணமாக நெல் மகசூல் பெருமளவு குறைந்ததால் அனைத்து வகையான அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 முதல் 15 வரை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் நியாய விலைக்கடைகளின் மூலம் விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் குறித்து புகார் எழுந்துள்ள நிலையில், வெளிச்சந்தைகளில் விற்கப்படும் அரிசியின் திடீர் விலை உயர்வு ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில் தற்போது அரிசியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உணவகங்களில் விற்கப்படும் உணவு வகைகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தனிக்கவனம் செலுத்துவதோடு, நியாய விலைக்கடைகளின் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இஸ்ரோவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்ல தேர்வாகியிருக்கும் குருப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரோவின் முக்கிய திட்டங்களான சந்திரயான் மற்றும் ஆதித்யா எல்.1 திட்டங்களில் தமிழர்களின் பங்களிப்பு இருந்ததை போலவே ககன்யான் திட்டத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் அவர்கள் இடம்பெற்றிருப்பது தமிழர்கள் அனைவரையும் பெருமையடையச் செய்திருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து நான்காவது நாடாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை படைப்பதோடு, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயத்தை தொடங்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் – மக்கள் நலப்பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்துகிறேன். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 14 ஆயிரம் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி கடந்த 13 ஆம் தேதி முதல் இருந்தே தற்செயல் விடுப்பு, உண்ணாவிரதம், பணி புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சூழலுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அரசு நிர்வாகத்திலும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் வருவாய்த்துறையின் அலுவலர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் அரசின் திட்டங்களை பெற விண்ணப்பிக்கும் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதோடு, மக்கள் நலப் பணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கர்நாடகாவில் உற்பத்தியாகி ஆந்திர மாநிலத்தின் வழியாக தமிழ்நாட்டில் அதிகளவு தூரம் பயணிக்கும் பாலாற்றின் மூலம் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்கள் தனக்கான குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன. பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டிருப்பட்டிருக்கும் 22 அணைகளால் போதிய தண்ணீரின்றி தமிழகத்தின் வட மாவட்டங்கள் வறட்சியை சந்தித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக புதிய அணையை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசும் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வரும் நிலையில், தற்போது பாலாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஆந்திர அரசும் தீவிரம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, தமிழகத்தின் வடமாவட்டங்களின் நீர் ஆதாரத்தை கேள்விக்குறியாக்கும் ஆந்திர அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து முற்றுப்புள்ளி வைப்பதோடு, எதிர்காலத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது -விளைநிலங்களையும், நீர்நிலைகளும் அழிக்கும் நோக்கில் அமையவிருக்கும் பரந்தூர் விமானநிலைய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். சென்னையின் இரண்டாவது விமானநிலையத்தை பரந்தூரில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்த நாளிலிருந்து 500 நாட்களுக்கும் மேலாக ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு இதுவரை 6 முறை அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றியுள்ளனர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் தொடர் எதிர்ப்புகளை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிக்காக 218 பேரிடம் இருந்து 93 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களும் விவசாயிகளும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலையில், 13 நீர்நிலைகளையும், ஏராளமான நீர்பிடிப்பு பகுதிகளையும் உள்ளடக்கி அமையவிருக்கும் பரந்தூர் விமானநிலையம், தொடர்ந்து வெள்ள பாதிப்பில் பொதுமக்களை சிக்கவைத்துக் கொண்டே இருக்கும் என நீரியல் நிபுணர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துள்ளனர். எனவே, தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, விளைநிலங்கள், நீர்நிலைகளை அழிக்கும் நோக்கில் அமையவிருக்கும் பரந்தூர் விமானநிலைய திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

“தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம்; தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள்” எனக்கூறி, தமிழக மக்களின் வளர்ச்சியையே லட்சியமாக கொண்டு இந்தியாவுக்கே முன்மாதிரியான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி “மக்களால் நான்; மக்களுக்காகவே நான்” என தன் இறுதி மூச்சு வரை மக்களுக்காக வாழ்ந்து மறைந்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள், மதுரை, ஹோட்டல் ஹெரிட்டேஜ் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை ராயப்பேட்டை, தலைமைக் கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும், கழக அமைப்பு ரீதியாக செயல்படும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கழக நிர்வாகிகள் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் – மாணவர்களின் நலன் கருதி நிர்வாக குளறுபடிகளைச் சீர்செய்து தமிழக அரசின் நிதி மூலமாகவே பல்கலைக்கழகம் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் இல்லை என்பதால் வருமானவரித்துறை தனது சட்டத்தின் படி அப்பல்கலைக்கழகத்தை தனியார் பல்கலைக்கழகமாகக் கருதி வரி விதித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி தமிழக அரசு வழங்கும் நிதியை ஏற்கனவே பெருமளவு குறைத்திருக்கும் நிலையில், தற்போது பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி வைத்திருப்பதால் நிர்வாக செயல்பாடுகள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ஊழியர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். கடந்த 6 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துறைசார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்கும் நிதியில்லாத நிலையில் வருமான வரியை எப்படி செலுத்த முடியும் என்ற கேள்வியை மாணவர்களும், பேராசிரியர்களும் எழுப்பியுள்ளனர். உலகப்புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்களையும், நாடு போற்றும் சாதனையாளர்களையும் உருவாக்கிய 150 ஆண்டுகளை கடந்த சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கல் தொடருமேயானால் பல்கலைக்கழகம் தனியார் வசம் செல்வதற்கான அபாயமும் ஏற்படும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர். எனவே, சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான உயர்கல்வியை வழங்கி வரும் சென்னைப் பல்கலைக்கழகத்தை வருமான வரித்துறை விவகாரத்திலிருந்து பாதுகாத்து மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசின் பொதுநிதியிலேயே சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் வளர்ச்சியையே லட்சியமாக கொண்டு இந்தியாவுக்கே முன்மாதிரியான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி “மக்களால் நான்; மக்களுக்காகவே நான்” என தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று. யார் போற்றினாலும் தூற்றினாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே எனக்கூறி தமிழக மக்களின் நலனுக்காக அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் காவல்நிலையம், மழைநீர் சேகரிப்பு, மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி என இதய தெய்வம் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்கள் அனைத்தும் பூமி உள்ளவரை அவரின் புகழை பாடிக் கொண்டே இருக்கும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் அம்மா அவர்கள் வகுத்து கொடுத்த பாதையில் அரசியல் எதிரிகளையும், துரோகிகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்திரையை பதிப்பதோடு, தமிழ்நாட்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் என அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது – போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்காக 3,200 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிப்காட் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து போராடும் விவசாயிகள் நிலமற்றவர்கள் எனவும், வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் சட்டமன்றத்தில் பேசியிருப்பது ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சரின் உண்மைக்கு மாறான கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி திருவண்ணாமலை மேல்மா கூட்டுச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கையில் 43-வது வாக்குறுதியான விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறுபயன்பாட்டிற்கு மாற்றுவது தடுக்கப்படும் என கூறிய திமுக அரசின் முதலமைச்சர், கோரிக்கை மனுக்களை வழங்க வரும் விவசாயிகளைச் சந்திக்க மறுத்து காவல்துறை மூலம் கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும். எனவே, விளைநிலங்களைப் பறித்து வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதோடு, சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களின் உண்மைக்கு மாறான கருத்தையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.