தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிர்வாகம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட பச்சை நிற பாக்கெட்டுகள் விநியோகம் குறைக்கப்பட்டு அதற்கு மாறாக கொழுப்புச் சத்து குறைந்த ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அதிகளவு விநியோகம் செய்யப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியில் ஓராண்டில் மட்டும் நான்குமுறை ஆவின் பால் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பதோடு, பண்டிகை நெருங்கும் காலங்களில் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை குறைப்பது மக்கள் மத்தியில் ஆவின் நிர்வாகம் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பால் திருட்டு, முறைகேடு என ஒட்டுமொத்த ஆவின் நிர்வாகமும் சீர்குலைந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது நிலவும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது பொதுமக்கள் தனியார் நிறுவன பாலை நாடிச் செல்லும் சூழலை உருவாக்கியுள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டுகளை எவ்வித தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதோடு, லாப நோக்கம் பார்க்காமல் பால் உற்பத்தியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக ஆவின் நிர்வாகம் செயல்படுவதை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் 55.42 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இந்தியாவின் தங்கமங்கை என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை வித்யா ராமராஜ் அவர்கள் சமன் செய்திருப்பதும் பாராட்டுதலுக்குரியது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிறுவயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்டு பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் வித்யா ராமராஜ், அடுத்தடுத்து உலகளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாட்டில் உச்சம் தொட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க திட்டமிட்டு அதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ள நிலையில், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஓராண்டுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை 6 முறை கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், தமிழ்நாடு அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் நீர்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்ததோடு 138 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெறுவதோடு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரக்கூடாது என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்கத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி மீண்டும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க முன்வந்திருக்கும் போக்குவரத்துத் துறையின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சென்னையில் உள்ள 32 பணிமனைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த முறை தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பணிமனைக்குள் மட்டுமே பணி வழங்கப்படும் என கூறிய போக்குவரத்துத்துறை தற்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணையில் பேருந்துகளை இயக்குவதற்கான பணி என குறிப்பிடப்பட்டிருப்பது போக்குவரத்துத்துறையை முற்றிலுமாக தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கை என தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், அவர்களின் கனவை சிதைத்துவிட்டு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை அவசரம் அவசரமாக நியமிப்பது ஏன்? திமுக ஆட்சிக்கு வந்த பின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விட்டிருப்பதோடு, தற்போது போக்குவரத்து கழகங்கள் முழுவதையும் தனியாருக்கு தாரைவார்க்க முயற்சிப்பது ஆளும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கையே காட்டுகிறது. எனவே, தனியார் நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணை திரும்பப் பெறுவதோடு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்காக பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் ட்ராப் பிரிவில் கழக அமைப்புச் செயலாளர் திருமதி.சாருபாலா தொண்டைமான் அவர்களின் மகன் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிய போட்டிகளைப் போலவே அடுத்த ஆண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியிலும் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் அவர்கள் தங்கம் வென்று சாதனை படைக்கவும், தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.