திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் மரணம் – உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரக் கழகச் செயலாளர் திரு. பாலாஜி அவர்களின் மகள் செல்வி. தாரணி அவர்கள், திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. செல்வி. தாரணி அவர்களை இழந்துவாடும் திரு.பாலாஜி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நிலைக் குறைவு என நேற்று பிற்பகலில் தகவல் தெரிவித்த செல்வி. தாரணி அவர்களை உடனடியாக பார்க்கச் சென்ற போது நீண்ட நேரம் காக்க வைத்ததோடு, இரண்டு மணி நேரம் கழித்து செல்வி.தாரணி அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவியின் தந்தை திரு.பாலாஜி அவர்கள் திருச்சி சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே, அந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, செல்வி.தாரணி அவர்களின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் தற்போதுவரை விடுவிக்கப்படாத நிலையில், நேற்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மீன்பிடி தடைக்காலமான இரண்டு மாதகாலம் கடலுக்குள் செல்லாமல் லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து தங்களின் படகுகளை பழுதுநீக்கி கடலுக்குள் சென்ற மீனவர்களை, எல்லை தாண்டியதாக கூறி கைது செய்துவரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. மீனவர்களின் கைதை தடுத்து நிறுத்தவும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை தாயகம் அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மேலும் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு மட்டுமே தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதாமல், தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து தமிழக மீனவர்களின் கைதை தடுத்து நிறுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி அருகே 24 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ கொடியவகை போதைப் பொருள் பறிமுதல் – எதிர்கால தலைமுறையை சீரழிக்கும் போதைப் பொருள் விற்பனையை கண்டுகொள்ளாமல் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் பொறுப்பற்றத் தன்மை கடும் கண்டனத்திற்குரியது. தூத்துக்குடி மாவட்டம் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ ஐஸ் கேட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சென்னையில் தொடங்கி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தாராளமாக புழங்கிக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களின் விற்பனை குறித்தும், அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படும் போதை மாத்திரைகள், போதை ஊசிகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் குறித்து பலமுறை புகார் அளித்தும் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஆளும் திமுகவின் செயல்பாடுகள் எதிர்கால தலைமுறையான இளைஞர்களின் நலன் மீதான அக்கறையின்மையையே வெளிப்படுத்துகின்றன. எனவே, தூத்துக்குடியில் போதை மருந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணையை மேற்கொண்டு, அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்வதோடு, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுறுத்தலை முறையாக பின்பற்றி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் – வாழ்வாதாரத்தை இழந்து வாழ வழியின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வுக்கான வசதியை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகளை அரசு செய்து தரக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரையில் அவர்களை வெளியேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. தலைமுறை, தலைமுறைகளாக தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் செவி சாய்க்காத தமிழக அரசின் மனிதாபிமானமற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தேயிலை பறிப்பதை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத நூற்றுக்கணக்கணக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளான இலவச வீட்டுமனைப்பட்டா, குழந்தைகளுக்கு தேவையான கல்வி வசதி, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசுப்பணி போன்றவற்றை நிறைவேற்றித் தர தமிழக அரசு முன்வர வேண்டும். ஆகவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அறிவுறுத்தலை பின்பற்றி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதோடு, அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்திய நால்வர் உயிரிழப்பு – கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறிய காவல் அதிகாரிகளும் அரசு நிர்வாகமுமே முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. கடந்த ஆண்டு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் அதிகமானோர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த பிறகும், கள்ளச்சாராயத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திறனற்ற திமுக அரசால் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. ஒவ்வொரு முறை ஏற்படும் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பிறகும், அரசு நிர்வாகத்தின் தவறுகளை மறைக்க, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம், காவல் உயர் அதிகாரிகள் இடமாற்றம், கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிரடி சோதனை எனும் கபட நாடகத்தை வாடிக்கையாக கொண்டிருக்கும் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இம்முறையும் அரசு நிர்வாகத்தின் தவறை மறைக்க காரணம் தேடாமல், ஊழல் மற்றும் முறைகேடு புகார், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் வரிசையில் இணைந்திருக்கும் கள்ளச்சாராய விற்பனையையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் திருமதி. சாருபாலா தொண்டைமான் அவர்களின் மகன் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் அவர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தேர்வாகியிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கங்களை குவித்து சாதனை படைத்திருக்கும் திரு. பிரித்விராஜ் தொண்டைமான் அவர்கள், பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.