அரசுப் பள்ளியில் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி எனும் பெயரில் அரங்கேறியிருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் – மாணவ, மாணவியர்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டிய அரசுப் பள்ளிகளில் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளை அனுமதிக்க கூடாது. சென்னை அசோக்நகர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறோம் எனும் பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சாளர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தன்னம்பிக்கையை எதிர்கொள்ளவும், அறிவாற்றலை கூர்மைப் படுத்திக் கொள்ளவும் தேவையான கல்வியை கற்றுத்தர வேண்டிய அரசுப் பள்ளியில், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. சென்னையின் முன்மாதிரிப் பள்ளியாக திகழும் அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பங்கேற்ற தனிநபரின் பின்புலம் என்ன ? யாருடையை அனுமதியின் பேரில் அவர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினார் ? என்ற கேள்விகளுக்கு விடை தெரியும் முன்பாகவே அப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களை பணியிடை மாற்றம் செய்திருப்பது சக ஆசிரியர்கள் மத்தியிலேயே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில், பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு அவசியமற்ற இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் பணியிடை நீக்கம் – அரசு நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களின் மீது அடக்குமுறையை கையாளும் திமுக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உசிலம்பட்டி தாலுக்கா கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து மதுரை ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பாலில் தண்ணீர் கலப்படம் செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆவின் பால் குளிரூட்டும் மையங்களில் நடக்கும் தண்ணீர் கலப்படம் தொடர்பாக எழுந்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆவின் நிர்வாகம், அதற்கு மாறாக தவறை சுட்டிக்காட்டிய ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மதுரை மாவட்டத்தில் உள்ள 686 கிராம அளவிலான கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு பாலின் தரம் குறித்தோ, அளவு குறித்தோ உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கப்படாமல் இருப்பதற்கும், இதுபோன்ற தண்ணீர் கலப்பட முறைகேடுகளுக்கும் ஆவின் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய ஊழியர் மீதான பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஆவின் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளையும் குளறுபடிகளையும் களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தஞ்சாவூரில் அடுத்தடுத்து அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் – பெண்கள் பாதுகாப்பில் அலட்சியப் போக்குடன் செயல்படும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தஞ்சாவூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த பெண் ஒருவரை லிப்ட் தருவதாக அழைத்துச் சென்ற இருவர், அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அளித்திருக்கக் கூடிய புகாரின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அப்பகுதி பெண்கள் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கு விசாரணையில் காவல்துறையும், திமுக அரசு காட்டிய அலட்சியப் போக்கே இது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும், அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நிகழாவண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.