திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பத்து வயது சிறுமி – புகார் வழங்கி ஐந்து நாட்கள் கடந்தும் குற்றவாளியைக் கைது செய்ய முடியாதது திமுக அரசின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாட்களே இல்லை என்ற நிலையில் குற்றச்சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது போல நடந்து கொள்ளும் திமுக அரசால், தற்போது பட்டப்பகலில் மேலும் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் கொடுமை அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய திமுக அரசும், அதன் காவல்துறையும் முற்றிலும் செயலிழந்து இருப்பதன் விளைவே, குற்றம் அரங்கேறி ஐந்து நாட்களைக் கடந்தும், பள்ளிச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளியைக் கண்டறிய முடியாத சூழலை ஏற்படுத்தியிருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் கொடூர மனம் படைத்தவர்களும் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில், நாள்தோறும் பொதுமக்களும், பெண்களும் உயிர் பயத்துடன் பதுங்கி பதுங்கி வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு திமுக அரசே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். எனவே, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபரைக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தி உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவதோடு, இனியாவது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை தரையில் படுக்க வைக்கப்பட்ட அவலம் – நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா?கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கிழிந்த நிலையில் இருக்கும் மெத்தைகளால் பிறந்த பச்சிளம் குழந்தைகள் தரையில் படுக்க வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.மேலும், மருத்துவமனை வளாகத்தில் மலைபோல குவிந்திருக்கும் மருத்துவக் கழிவுகளால் நிலவும் சுகாதார சீர்கேட்டால், அம்மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் புதுவகை நோய்களுடன் திரும்பிச் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் அதிகளவிலான பிரசவம் நடைபெறும் மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழக்கூடிய கள்ளக்குறிச்சி மகப்பேறு மருத்துவமனையின் தற்போதைய அவல நிலை அங்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தூய்மைப்பணியாளர்கள், மருந்துகள் தட்டுப்பாட்டால் தனியார் மருந்தகங்களை நாடும் பொதுமக்கள், போதிய படுக்கைகள் இல்லாததால் தரையில் படுக்கும் நோயாளிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் செயல்படும் மருத்துவமனைகள், தமிழக சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. எனவே, சுகாதாரத்துறையில் முன்னணி மாநிலம் தமிழகம் என்ற வெற்று விளம்பரத்தை இனியாவது ஓரங்கட்டி வைத்துவிட்டு, மருத்துவமனைகளின் அவல நிலையை உணர்ந்து அங்கு நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தட்டுப்பாட்டையும், அடிப்படை வசதிகள் உட்பட மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டைப் போக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

எளிய குடும்பத்தில் பிறந்து, கடைக்கோடி தொண்டனாக அரசியலில் இணைந்து, இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு மாபெரும் தலைவராக உயர்ந்தவரும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவருமான முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஏழை, எளிய மக்களின் நலனையே லட்சியமாகக் கொண்டு, தனக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தையும் சேவை செய்வதற்கான வாய்ப்பாகக் கருதி கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான பெண் கைதி தாக்கியதில் சிறை தலைமைக் காவலர் படுகாயம் – புழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், அங்குக் கண்காணிப்பு பணியிலிருந்த சிறை தலைமைக் காவலர் படுகாயமடைந்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே புழல் சிறையில் சட்டவிரோதமாக செல்போன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் எழுந்த புகாரைக் கண்டுகொள்ளாத சிறைத்துறையால் தற்போது சிறை தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது.போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் வழங்கியிருக்கும் அபரிவிதமான சலுகைகளே இதற்குக் காரணம் எனச் சிறைக்காவலர்கள் வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள்.பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி அதற்கான தண்டனையை அனுபவிக்கப் புழல் சிறைக்கு வரும் கைதிகள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாகச் சுற்றித் திரிவதால், அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நாங்கள் கைதிகள் போல அடைக்கப்பட்டிருப்பதாகச் சிறைக்காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சிறைத்துறை மீது எழுந்திருக்கும் புகாரை விசாரணைக்கு உட்படுத்துவதோடு, புழல் சிறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறைக்காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்பு – தீயணைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவசிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும்.சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து மும்பைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சரக்கு ரயிலில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகை திருவள்ளூர் ரயில் நிலையத்தைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட ரயில் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதோடு, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், திருவோணம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புதல்வன் திரு.லட்சுமணன் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற தேசிய பாரா கை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கடின பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கும் திரு.லட்சுமணன் அவர்களின் சாதனைப் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.