சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் மூலம் (FIDE) ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் உலக செஸ் கோப்பை தொடரில் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் அவர்களுக்கும் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் கோனேரு ஹம்பி அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் உலக செஸ் கோப்பைத் தொடர் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை படைத்திருக்கும் இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி ஆகிய இருவரின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

இந்திய துணைக்கண்டம் கண்ட மகத்தான சோழப் பேரரசர்களுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் – வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழா, கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்ததோடு, மாமன்னர்கள் ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இருவருக்கும் பிரம்மாண்ட சிலைகள் தமிழகத்தில் அமைக்கப்படும் என அறிவித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன். எதிர்கொண்ட போர்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடிய மாமன்னர் ராஜராஜசோழன், இந்திய துணைக்கண்டம் கண்ட மகத்தான பேரரசர்களில் ஒருவரான ராஜேந்திர சோழன் ஆகிய இருவரின் பெருமையையும், புகழையும் போற்றிக் கொண்டாடும் வகையில் சிலை அமைக்க வேண்டும் என்ற அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நீண்ட கால கோரிக்கையும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அறிவிப்பின் மூலம் நிறைவேறியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான காவல் உதவி ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு – காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? சென்னை எழும்பூரில் கடந்த 18 ஆம் தேதி அடையாளம் தெரியாத போதைக் கும்பலால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு .ராஜாராமன் அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜாராமன் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும், குற்றவாளிகளை இதுவரை கண்டறிய முடியாத காவல்துறையால், தமிழகத்தில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எப்படி பாதுகாப்பு வழங்க முடியும் ? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் பட்டப் பகலில், வீடுகளில், மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில், காவல்நிலையங்களுக்கு அருகிலேயே அன்றாடம் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கும் அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. எனவே, காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜாராமன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, தமிழகத்தின் தலைவிரித்தாடும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சட்டவிரோத மதுவிற்பனை, கூலிப்படைகளின் அராஜகம் ஆகியவற்றை அடியோடு ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.