பெங்களூருவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அண்டை மாநிலங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கேபிள் டிவிக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் – பொதுமக்களுக்கு குறைந்த செலவில் கேபிள் டிவி சேவை வழங்குவதை மத்திய அரசும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (TRAI) உறுதி செய்ய வேண்டும். சேனல் விலையை 19 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக குறைக்க வேண்டும், கேபிள் டிவிக்கு விதித்துள்ள 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் அன்றாட நிகழ்வுகளையும், செய்திகளையும் அறிந்து கொள்வதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் பயன்படுத்தக் கூடிய கேபிள் டிவியில் ஒளிபரப்பாகும் சேனல்களின் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதால் பொதுமக்களுக்கான மாதாந்திர கேபிள் கட்டணமும் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் கேபிள் டிவி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது மத்திய அரசு விதித்திருக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி கூடுதல் சுமையை ஏற்படுத்தியிருப்பதோடு, தொழிலை முற்றிலும் முடக்கும் வகையில் அமைந்திருப்பதாக கேபிள் டிவி சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, கேபிள் டிவி தொழிலை பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த செலவில் சிறந்த சேவை வழங்கும் நோக்கிலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

தீபாவளி உட்பட பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை போக்குவரத்துத்துறை கைவிட வேண்டும் – நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் தேவைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுடன், தனியார் பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகள் வாங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்க முன்வராத திமுக அரசு, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அப்பேருந்துகளின் ஓட்டுநர்களை வைத்தே இயக்க முயற்சிப்பது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கு ஆகும். போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியார் நிறுவனங்களின் மூலம் ஆட்சேர்ப்பு, ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமனம் வரிசையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதும் போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியே என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் தொழிலாளர் விரோதப் போக்கை உடனடியாக கைவிடுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என போக்குவரத்துத் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வராத உயர்கல்வித்துறையின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது – உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள அனைத்து பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த பல ஆண்டுகளாக புதிய பேராசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படாத காரணத்தினால் அக்கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்களில் சுமார் 8 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பெரும்பாலான அரசு கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் தொடர் சரிவை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான பேராசியர்கள் இல்லாத காரணத்தினால் பாடத்திட்டத்திற்கு தகுந்த வகுப்புகள் முறையாக நடைபெறுவதில்லை எனவும், குறிப்பாக கிராமப்புற கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாகவும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். போட்டித் தேர்வுகளின் மூலம் அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த தமிழக அரசின் உயர்கல்வித்துறை, அந்த அறிவிப்புக்கு பின் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அக்கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட அவமதிப்பா? சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாத கொண்டாட்டங்கள் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன் விழா கொண்டாட்டங்கள் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தின் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” எனும் வரி விடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது தற்செயல் நிகழ்வா? அல்லது திட்டமிட்டு நடைபெற்ற அவமதிப்பா? என்பது குறித்து சென்னைத் தொலைக்காட்சி நிலையம் விரிவான விளக்கமளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து திட்டமிட்டு அவமதிக்கப்பட்டது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும் சென்னை தொலைக்காட்சி நிலையத்தையும் வலியுறுத்துகிறேன்.

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் தமிழகத்தில் இந்தி மாத கொண்டாட்டங்கள் நடைபெறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல – இனி வரும் காலங்களில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் இந்தி மாத கொண்டாட்டங்கள் நிறைவு விழா மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன் விழா கொண்டாட்டங்கள் நிகழ்வில் மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சொல் வளத்திலும், இலக்கணச் செழுமையிலும், செய்யுள் ஆளுமையிலும், பண்பாட்டுச் சிறப்பிலும் தலைசிறந்ததாக திகழும் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடத்துவதும், அதில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் விருந்தினராக பங்கேற்பதும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த ஒரு மொழிக்கும் தேசிய மொழி என்ற அடையாளத்தையோ, அங்கீகாரத்தையோ வழங்காத நிலையில், பல்வேறு மொழிகள் பேசும் இந்திய நாட்டில் இந்தி மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், இந்தி பேசாத மாநிலமான தமிழகத்தில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, இந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்தி மொழி கொண்டாட்ட நிகழ்வுகளை இனிவரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.