கோவை – திருப்பதி ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் – சர்வ சாதாரணமாகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது திமுக அரசு? கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் அத்துமீறி நுழைந்த இருவர், அதில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, தன்னைக் காப்பாற்றக் கூறி கூச்சலிட்ட பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. நேற்று ஒரே நாளில், கோவை மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுமி, திருச்சியில் பள்ளித் தாளாளரின் கணவரால் பாலியல் துன்புறுத்தப்பட்ட 4 வயது குழந்தை, கடலூரில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் தொந்தரவுக்குள்ளான 16 வயது சிறுமி என அடுத்தடுத்து நடைபெற்றிருக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்? குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் சிறிதளவும் அக்கறையற்ற திமுக அரசால், அரசுப் பள்ளிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்து என அனைத்து இடங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, கடுமையான சட்டங்களை கொண்டுவந்த பிறகும் தினந்தோறும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றச்சம்பவங்களை அடியோடு தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சரையும், அவர் வசம் இருக்கும் காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

சிவகங்கை அருகே காவல்நிலையத்திற்குள் புகுந்து பெண் காவல் உதவியாளர் மீது தாக்குதல் – சம்பவத்திற்கு காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் காவல்நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. காவல்நிலையத்திற்குள் புகுந்து பணியிலிருக்கும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் மீது நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் பணியில் ஈடுபட்டுள்ள தன் மகளுக்கு காவல்நிலையத்திலேயே பாதுகாப்பில்லை எனக்கூறி கதறி அழும் பாதிக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரின் தாய்க்கு காவல்துறை என்ன பதில் சொல்லப் போகிறது ? தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக பெண் காவல் உயர் அதிகாரி ஒருவர் அளித்த புகார் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே காவல்நிலையத்திற்குள் பெண் காவல் ஆய்வாளர் மீது நடைபெற்றிருக்கும் தாக்குதல் சம்பவம் தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு துளியளவும் பாதுகாப்பில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது. எனவே, சிவகங்கையில் காவல்நிலையத்திற்குள் புகுந்து பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களை காக்கும் நோக்கில் காவல்துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் – பெண்கள் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழலை உருவாக்கியிருக்கும் திராவிட மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு , கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி ஒருவரை பள்ளியில் வைத்தே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய மூன்று ஆசிரியர்கள், என ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அதைப் போலவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்றிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தியும் மிகுந்த வேதனையை தருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும், குற்றச்சம்பவங்களும் அதிகமாக அரங்கேறும் மாநிலமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், பெண் காவலர்கள் என ஒட்டுமொத்த பெண்களும் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அளவிற்கான அவல நிலையை உருவாக்கியுள்ளது இந்த திராவிட மாடல் அரசு என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இனியாவது சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, இரவு நேரங்களில் போதுமான காவலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தி பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களோடு, அதற்கு அடிப்படை காரணமாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் அடியோடு ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.