மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், உயிர் பிரியும் நிலையிலும் தேசியக் கொடியைக் கீழே விழாமல் தாங்கிப் பிடித்த தேசப்பற்று மிக்கவருமான கொடி காத்த குமரன் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆதிக்கம் நிறைந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக இளைஞர் படையைத் துணிச்சலுடன் வழிநடத்திச் சென்றதோடு, நாட்டின் சுதந்திரத்திற்காக இளம் வயதிலேயே தன்னுயிர் நீத்திட்ட உன்னதமிக்க விடுதலைப் போராட்ட வீரர் கொடி காத்த குமரனின் தியாகத்தை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என முதலமைச்சர் அறிவித்த பின்பும் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது ஏன்? – திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட ஓய்வூதியக் குழு, தன்னுடைய கால அவகாசம் முடிந்த பின்பும் இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருப்பதை கண்டித்து அக்டோபர் 6 ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்யப்போவதாக தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஓய்வூதியக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் தங்களின் கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் ஓய்வூதியக் குழுவிடம் வழங்கிய நிலையிலும், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து கால தாமதம் ஏற்படுத்துவது எந்தவகையிலும் ஏற்க முடியாதது. காலநீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்பதை நேரடியாக கேட்காமல், இடைக்கால அறிக்கை எனும் பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஓய்வூதியக் குழு அடியோடு சீர்குலையைச் செய்திருப்பதாக அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. எனவே, அரசு அமைத்த ஓய்வூதியக்குழுவின் முழு அறிக்கையை உடனடியாக பெறுவதோடு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிக முக்கிய கோரிக்கை மட்டுமல்லாது, திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.