திருப்பூர் அருகே தோட்ட இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியர் படுகொலை – அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலை, கொள்ளைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் உள்ள தோட்ட இல்லத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் மற்றொரு படுகொலைச் சம்பவம் தமிழக காவல்துறையின் தோல்வியையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திருப்பூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே தனியாக வசித்துவரும் முதியவர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும், அவர்களின் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடப்படுவதும் தொடர்கதையாகி வருவது ஒட்டுமொத்த முதியவர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய வேண்டிய காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி தமிழக மக்களை திசை திருப்புவதிலும் தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றுவதிலும், கவனம் செலுத்தி வருவதே இதுபோன்ற சம்பவங்கள் தொடர காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருப்பூர் வயதான தம்பதியர் கொலைவழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9,492 சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடல் – உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்க முடியாத திமுக அரசு, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுப்பது வெட்கக்கேடானது. இந்திய அளவில் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவு மூடப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தேசத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வதில் முன்னணி வகிக்கும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்படுவது, அந்தந்த தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது அதில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மின்கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமை பேசுவது வெட்கக் கேடானது. முதலைமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தின் போதும், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்கும் திமுக அரசு, தமிழகத்தில் முதலீடுகள் அதிகளவு ஈர்க்கப்படுவது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தொழில் முடக்கத்தை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பதோடு, பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை சிறு குறு நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.