தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வு – ஏழை, எளிய மக்களின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.தமிழகத்தில் விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 40 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தையும் உயர்த்தியிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது உயர்ந்திருக்கும் இந்த சுங்கக் கட்டணம் ஏழை, எளிய மக்களின் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மக்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் சுங்கக் கட்டணத்தால் சரக்கு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணங்கள் உயர்வதோடு, பேருந்துக் கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் – சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் மட்டும் நிலவும் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், சுமார் 500க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதோடு மழலைக் குழந்தைகளின் ஆரம்பகால கல்வியும் ஊட்டச்சத்து தேவையும் கேள்விக்குறியாகியுள்ளது.சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப்பணியாளர்களாக பணியமர்த்துவதோடு, அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும் என்ற திமுகவின் 313வது தேர்தல் வாக்குறுதி இனியும் நிறைவேறும் என்ற நம்பிக்கையை இழந்த சத்துணவுப் பணியாளர்கள் வேறுவழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு,நிர்வாகத் திறனின்றி காலிப்பணியிடங்களை நிரப்பாமல் கால தாமதம் ஏற்படுத்துவதோடு, ஏற்கனவே அரசின் பல்வேறு பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களைக் கூட பணிநிரந்தரம் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, சத்துணவுப் பணியாளர்களுக்குத் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்வதோடு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.