கத்தார் மாஸ்டர் செஸ் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனும், முதல்நிலை வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனைப் படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் கார்த்திகேயன் முரளி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை தொடர்ந்து, கிளாசிக் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை கார்த்திகேயன் முரளி பெற்றுள்ளார். 7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் முதலிடம் வகிக்கும் கார்த்திகேயன் முரளி எஞ்சிய சுற்றுகளிலும் வெற்றிபெற்று தாய்நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் அவர்கள் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்.

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிர்வாகம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட பச்சை நிற பாக்கெட்டுகள் விநியோகம் குறைக்கப்பட்டு அதற்கு மாறாக கொழுப்புச் சத்து குறைந்த ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அதிகளவு விநியோகம் செய்யப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியில் ஓராண்டில் மட்டும் நான்குமுறை ஆவின் பால் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பதோடு, பண்டிகை நெருங்கும் காலங்களில் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை குறைப்பது மக்கள் மத்தியில் ஆவின் நிர்வாகம் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பால் திருட்டு, முறைகேடு என ஒட்டுமொத்த ஆவின் நிர்வாகமும் சீர்குலைந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது நிலவும் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு என்பது பொதுமக்கள் தனியார் நிறுவன பாலை நாடிச் செல்லும் சூழலை உருவாக்கியுள்ளதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டுகளை எவ்வித தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதோடு, லாப நோக்கம் பார்க்காமல் பால் உற்பத்தியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக ஆவின் நிர்வாகம் செயல்படுவதை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராமராஜ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் 55.42 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இந்தியாவின் தங்கமங்கை என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை வித்யா ராமராஜ் அவர்கள் சமன் செய்திருப்பதும் பாராட்டுதலுக்குரியது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிறுவயதிலிருந்தே விளையாட்டு மீது ஆர்வம் கொண்டு பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் வித்யா ராமராஜ், அடுத்தடுத்து உலகளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று விளையாட்டில் உச்சம் தொட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.