திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தனியார் குடியிருப்பு வளாகத்தில் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர் திரு.சுரேஷ் அவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்த சுரேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் உயிரிழப்பில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 50க்கும் அதிகமான பணியாளர்கள் கழிவுநீர் அகற்றும் பணியின் போது உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், இயந்திரங்களை கொண்டே கழிவுநீர் அகற்றப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்பதை அடிக்கடி நிகழும் மரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தொடர்ந்து நடைபெறும் உயிரிழப்புகளை தடுக்க, அரசின் உத்தரவை மீறி கழிவுநீர் அகற்றும் பணியில் சட்டவிரோதமாக மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு வழங்கப்படும் தண்டனையை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வுச் சட்டம் குறித்தும், விஷவாயு மரணங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உயிரிழப்புகளை தடுக்க மாநில அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் புது பாய்ச்சலுடன் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல், தொழில், விவசாயம், கல்வி, விளையாட்டு, மக்கள் சார்ந்த பிரச்னைகள் என அனைத்து விதமான செய்திகளையும் எவ்வித பாரபட்சமுமின்றி நடுநிலையாக ஒளிபரப்பு செய்வதில் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. பேச்சு, கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்தை தொடர்ந்து நிலைநாட்டி, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் செய்திகளை ஒளிபரப்பி வரும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி மென்மேலும் உயர்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் இந்தியாவின் பன்முகத்தன்மை ஆட்சிக்கு சவாலாக இருந்த இந்தித் திணிப்பை எதிர்த்திடவும் நடைபெற்ற மொழிப்போரில் பங்கேற்று தங்களின் உயிரை துறந்து தமிழ்மொழியை காத்திட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வருகின்ற 25.01.2024 (வியாழன்கிழமை) தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம். கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் பொதுக்கூட்டமும், மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திடுவதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட கழக செயலாளர்களுடன், மாணவர் அணி மற்றும் மாணவியர் அணி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சிகளில், அந்தந்த வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் அன்னைத் தமிழ்மொழியைக் காத்து நின்றிடவும், நம் தாய்மொழிக்கு கிடைக்க வேண்டிய பெருமைகள் அனைத்தையும் பெற்றுத்தந்திடவும், காலத்திற்கேற்ற வகையில் தமிழின் வளர்ச்சியை ஊக்குவித்திடவும் பாடுபட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளில் உறுதியேற்றிடுவோம்.

சமூகநீதியை பாதுகாக்கவும், கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் முதன்முறையாக பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் ஏற்கனவே இருந்த 50 சதவிகித இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. பீகார் மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் அந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கும், அதற்கு சட்டரீதியாக எந்தவித தடையும் இல்லை என்பதற்கும் பீகார் தொடங்கி ஆந்திரா வரையிலான பல்வேறு மாநிலங்கள் உதாரணமாக இருக்கும் நிலையில் தமிழகம் மட்டும் மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன் ? பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களை முன்னேற்றுவதற்கான சமூகநீதி நடவடிக்கையான இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்துவந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வறுமையின் காரணமாக வீட்டுவேலைக்கு சேர்ந்த இளம்பெண்ணை திரு.கருணாநிதி அவர்களின் மகனும், மருமகளும் சேர்ந்து நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையாக தாக்கி துன்புறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நன்றாக படிக்க வைக்கிறோம், படிப்புக் கட்டணத்தையும் நாங்களே செலுத்துகிறோம் என ஆசைவார்த்தைகள் கூறி பணிக்கு சேர்ந்தபின் நாள்தோறும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் குடும்பம் என்ற அதிகாரப்போக்கே இதுபோன்ற அறுவறுக்கத்தக்க வன்முறைச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடக் காரணம் என பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தி, மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கருணாநிதி அவர்களின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.