January 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ சங்கத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்கள் கடந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, காலம் காலமாக பெற்று வந்த சரண் விடுப்பை (Surrender Leave) காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எதிர்கட்சித் தலைவராக இருந்த போது அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்ட திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தயங்குவது ஏன்? நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதன் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரலாம் என்ற ஜனநாயக விரோதப் போக்கை தமிழக அரசு இத்துடன் கைவிட வேண்டும். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 30, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி – காலிப்பணியிடங்களை உடனடியாக அதிகரிப்பதோடு, குளறுபடி, முறைகேடுகளின்றி தேர்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்விற்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வனக்காவலர் பணியிடங்களையும் சேர்த்து 6,244 பணியிடங்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பாணை, தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. அதே நேரத்தில், முன்னதாக நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஓராண்டுக்கு பின்னர் காலதாமதாக அறிவிக்கப்பட்டதையும், அதில் ஒரே தேர்வு மையத்தில் பயின்ற ஏராளமான தேர்வர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார்களையும் கருத்தில் கொண்டு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வை எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்துவதில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் முழு கவனம் செலுத்திட வேண்டும். மேலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை நினைவாக்கும் வகையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து புதிய அறிவிப்பாணை வெளியிடுவதோடு, நியாயமான முறையில் தேர்வை நடத்தி உரிய காலத்திற்குள் முடிவுகள் வெளியிடுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செயய் வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
January 30, 2024 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரத தேசத்தின் விடுதலைக்காக வன்முறையற்ற அகிம்சை போராட்டத்தை அறிமுகப்படுத்திய நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று.நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களின் மனதில் சுதந்திர உணர்வை தூண்டி விடுதலைப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறும், அவர் நடத்திய அகிம்சை போராட்டங்களும் அழியாச் சுவடுகளாக என்றென்றும் நிலைத்திருக்கும்.
January 29, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படாத காரணத்தினால் செலவினங்களை சமாளிக்க முடியாமல் கூட்டுறவு சங்கங்கள் திணறி வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டுறவு சங்கங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் மானியத் தொகை மூலமாகவே நியாய விலைக்கடைகளின் வாடகை, பணியாளர்களுக்கு ஊதியம், பணிக்கால பயன்கள், மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவை தொகையில், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.225 கோடியும் தற்போதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதால் நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களின் அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் நியாய விலைக்கடைகள் எவ்வித சிரமமுமின்றி இயங்குவதற்கு உரிய நேரத்தில் மானியத் தொகையை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
January 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவிற்கு முரணாக காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில ஆளுநர் அவர்களின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும். காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத் தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
January 26, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தென்மாவட்ட மக்களை வஞ்சிக்கும் கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநரின் உரையில் முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டுவதே கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்கு ஒரே தீர்வு எனவும், தமிழகத்துடன் சுமூக உடன்பாட்டிற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொடர் சட்டப் போராட்டத்தால் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு மற்றும் நிபுணர் குழு பலமுறை மேற்கொண்ட ஆய்வில் முல்லைப் பெரியாறு பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திய பின்னரும் புதிய அணையை கட்டியே தீருவோம் என்ற கேரள அரசின் பிடிவாதப்போக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியை ஆரம்பநிலையிலேயே தடுத்து நிறுத்துவதோடு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி பேபி அணையை பலப்படுத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
January 26, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள குடியரசு முன்னாள் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள், திரைப்பட நடிகர் திரு.சிரஞ்சீவி அவர்கள், நடனக்கலைஞர் வைஜெயந்திமாலா அவர்கள், நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்கள், ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பதும் மனநிறைவையும் மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அதே போல, பத்ம ஸ்ரீ விருதை பெற்றிருக்கும் கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்திரப்பன் அவர்கள், சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா அவர்கள், எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்கள், நாதஸ்வர கலைஞர் சேசம்பட்டி டி.சிவலிங்கம் அவர்கள், மருத்துவர் நாச்சியார் அவர்கள் உட்பட மத்திய அரசின் பத்ம விருதுகளை பெற்றிருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் தொடர்ந்து சாதனை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
January 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. பவதாரணி அவர்களை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கும், சக திரையுலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
January 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் மற்றும் உரிமையாளர் மீது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபின், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறை மீதான அடக்குமுறைகள் அதிகரித்துவருவதன் ஒரு பகுதியாக, தினமலர் நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் மீது மதுரை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசின் முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகைகள் மீது வழக்கு தொடர்வதாலும், சட்டரீதியாக பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பதாலும், தான் செய்த தவறுகள் நியாயமாகிவிடாது என்பதை அரசு நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரமே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதை உணர்ந்து, தினமலர் மீதான வழக்குகளை ரத்து செய்வதோடு, பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
January 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நம் நாட்டில் வலுவான ஜனநாயகம் தழைத்தோங்க தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட இந்திய அரசியமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த இந்நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு சுதந்திரத்தை அடைய பாடுபட்ட தியாகிகளையும், தேசத் தலைவர்களையும் நினைவு கொள்வதோடு, அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக கடைபிடித்து நாட்டின் வளர்ச்சிக்காக தனது பங்களிப்பை அளிக்க ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்போம்.