மண்ணின் ஆரோக்கியம் மற்றும் மக்களின் நல்வாழ்வை முன்னிறுத்தி வேளாண்மைத் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கியவரும், இயற்கை விவசாயத்தின் அவசியத்தை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரப்பியவருமான இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் பிறந்த தினம் இன்று. இயற்கை விவசாயத்தை வெறும் தொழிலாகக் கருதாமல், வாழ்வியல் நடைமுறையாக பின்பற்றியதோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை ஆழமாக வேரூன்றச் செய்த மாமனிதர் நம்மாழ்வார் அவர்கள் காட்டிய பாதையில் பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – மாநில உரிமை பறிபோவதை இனியும் வேடிக்கை பார்ப்பது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என மாண்புமிகு மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு.சி.ஆர்.பாட்டில் அவர்களை கர்நாடக மாநிலத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற மறுத்து தமிழகத்திற்கான நீரை உரிய நேரத்தில் வழங்க மறுத்துவரும் கர்நாடக அரசு, தற்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என பிடிவாதப் போக்குடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. கர்நாடக அரசின் இத்தகைய நடவடிக்கை, காவிரியின் குறுக்கே தமிழகத்தின் அனுமதியின்றி எந்த இடத்திலும் அணை கட்ட முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுக்கு முரணாக இருப்பதோடு, காவிரி நீரை மட்டுமே நம்பியிருக்கும் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படாத நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்திற்கு கர்நாடக மாநில துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.டி.கே.சிவக்குமார் அவர்களை அழைத்து உபசரிப்பு வழங்கிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தின் முயற்சிகளை தடுத்து நிறுத்த எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது மாநில உரிமையை விட திமுக அரசுக்கு கூட்டணி தான் முக்கியம் என்பதையே வெளிப்படுத்துகிறது. எனவே, காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகளுக்கு நிரந்தர தடைவிதிப்பதற்கான நடவடிக்கைகளை சட்டரீதியாக மட்டுமல்லாது, காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மூலம் அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்தவரும், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவராக பணியாற்றியவருமான தேவர் தந்த தேவர் திரு.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று. பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததோடு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் போது நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரலையும் பதிவு செய்த திரு.மூக்கையாத் தேவர் அவர்கள் ஆற்றிய எண்ணற்ற அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது – மீனவர்களை அரசியல் பகடைக்காயாக பயன்படுத்தும் திமுக அரசுக்கு ஒட்டுமொத்த மீனவர்களும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் தமிழக மீனவர்களை பாதுகாக்கவோ, கச்சத்தீவை மீட்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பதவிக்காலம் நிறைவடையும் தருவாயில் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுவது ஒட்டுமொத்த மீனவர்களையும் ஏமாற்றும் செயலாகும்.ஆம் ஆண்டு கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டதை தடுக்க எதையுமே செய்யாமல் மவுனம் சாதித்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள், அதன் பின் மத்திய ஆட்சி அதிகாரத்தில் சுமார் 16 ஆண்டுகள் அங்கம் வகித்தும் கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான துரும்பைப் கூட கிள்ளிப்போடவில்லை என்பதை தமிழக மீனவர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள். தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழி என்ற வரிகளுக்கு ஏற்ப கச்சத்தீவு தாரைவார்க்கும் போது திரு.கருணாநிதி அவர்கள் எவ்வாறு மவுனம் சாதித்தாரோ, அதைப் போலவே தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாக எதையுமே செய்யாமல் தற்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்திருப்பது வாக்கு வங்கி அரசியலுக்காக தானே தவிர, தங்களின் மீதான உண்மையான அக்கறை அல்ல என்பதை தமிழக மீனவர்கள் அனைவரும் நன்கு அறிவர்.எனவே, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க தமிழக மீனவர்களை பகடைக்காயாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மீதமிருக்கும் ஓராண்டில் தமிழக மீனவர்களை பாதுகாத்திடவும், கச்சத்தீவை மீட்கவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சென்னையில் வழக்கறிஞர், தூத்துக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் என தொடரும் படுகொலைகள் – முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்து கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது எப்போது?தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மர்மமான முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், தமிழகத்திற்குள் நுழைந்து வழிப்பறியில் ஈடுபடும் வெளிமாநிலக் கும்பல், ஜாமினில் வெளிவரும் ரவுடிகள் படுகொலை என ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்களின் தலைநகரமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடைபெறாத நாட்களே இல்லை என்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் சிறிதும் வாய்கூசாமல் கொலைச் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதாகவும், அவற்றை எதிர்க்கட்சியினர் ஊதிப் பெரிதாக்கி காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பது அவரின் அறியாமையையே வெளிப்படுத்துகிறது. எனவே, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறியாமை எனும் மாய உலகத்திலிருந்து விழித்தெழுந்து தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவதில் அதீத கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வானகரம், பரனூர், செங்கல்பட்டு, சூரப்பட்டு உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஏற்கனவே அளவிற்கு அதிகமாகவும், காலாவதியான நிலையிலும், செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அதற்கு மாறாக தொடர்ந்து சுங்கக் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும். தமிழகத்தில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தோடு, கூடுதலாக ரூ.5 முதல் ரூ.75 வரை வசூலிக்கும் பட்சத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து சாமானிய மக்கள் மென்மேலும் சிரமத்திற்குள்ளாகும் சூழல் உருவாக கூடும். எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், வணிகர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, காலாவதியான நிலையில் செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளை அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.