சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியார் மதுபானக் கூட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு – பாதுகாப்பு வசதிகளின்றி இயங்கும் மதுபானக்கூடத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு கடும் கண்டனம். பொதுமக்களின் உயிரை வணிக நோக்கத்துடன் அணுகாமல் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கிவரக்கூடிய மதுபானக்கூடங்களை கணக்கெடுத்து, உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஷேக்மேட் மதுபானக்கூட நிறுவனர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி ஒருங்கிணைந்து செயல்பட்டு அவர்களின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளையும் உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் பிரதமராக மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக அரியணையில் ஏற்றுவதோடு, தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த நாடாளுமன்ற தேர்தல் களம் அமையட்டும்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தால் பேரழிவை நோக்கி பயணிக்கும் இளைஞர் சமுதாயம் – போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை ஆவடி அருகே மாநகர அரசுப் பேருந்து ஒன்றில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த பத்து நாட்களில் மட்டும் கடலூர், திருப்பூர், நாமக்கல், திண்டிவனம் என தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் போதை மாத்திரைகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள், அதனை கட்டுப்படுத்த தவறிய தமிழக காவல்துறையின் மெத்தனப் போக்கை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. ஏற்கனவே, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொடியவகை போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முற்றிலுமாக சிதைக்கும் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகளின் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக குற்றச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே, தமிழகத்தில் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்பனை தொடர்பான புகார்களில் திமுக அரசு இனியும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் ஆற்றுவார்கள்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.