2024 ஆம் ஆண்டுக்கான காவல் சார்பு ஆய்வாளர் தேர்வை நடத்த தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது – வயது உச்சவரம்பால் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் தற்போது வரையில் வெளியாகாத நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வும் நடத்தப்படாத காரணத்தினால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வு நடைபெறாததால் அந்த தேர்வையே இறுதி வாய்ப்பாக கருதி இரவு, பகலாக தேர்வுக்கு தயாரான ஆயிரக்கணக்கான மாணவர்களின் வயது உச்ச வரம்பு கடந்திருப்பதால் அவர்கள் அடுத்து வரும் தேர்வை எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் அறிவித்த தேர்வுகளை கூட திட்டமிட்டபடி நடத்தாமல் இளைஞர்களின் அரசுப்பணி கனவை கேள்விக்குறியாக்கி வருவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, வயது உச்சவரம்பால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுவதோடு, அந்த தேர்வுக்கான வயது உச்சவரம்பை 2024 ஆம் ஆண்டுக்கான வயது வரம்பு அடிப்படையிலேயே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணிநிரந்தரம் செய்வதோடு, பொங்கல் திருநாளை தங்கள் குடும்பத்தினரோடு கொண்டாட ஏதுவாக போனஸ் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் 5 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ், மருத்துவக்காப்பீடு உள்ளிட்ட எந்தவிதமான சலுகைகளையும் வழங்காமல் அவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிப்பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது பகுதிநேர ஆசிரியர்களுக்கு இழைக்கும் நம்பிக்கைத் துரோகம் ஆகும். எனவே, மிகக்குறைவான ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தம் செய்வதோடு, வரவிருக்கின்ற பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக போனஸ் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது- தமிழகத்தின் வட மாவட்டங்களை பாலைவனமாக்கும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் . பாலாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் இந்த அறிவிப்பு வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு வடமாவட்டங்களில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாலாற்றின் குறுக்கே அணை கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதப் போக்குடன் செயல்பட்ட முந்தைய அரசின் பிடிவாதப் போக்கையே திரு.சந்திரபாபு நாயுடு அவர்களும் தொடர்வது, 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட மைசூருக்கும் சென்னைக்கும் இடையிலான நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மீறுவதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் முரணாக அமைந்திருக்கிறது. எனவே, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை கடுமையாக பாதிக்கும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை வலியுறுத்துகிறேன்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக அறவழியில் நடைபெறும் பேரணிக்கு அனுமதி மறுப்பு – விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீதான திமுக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி மதுரை மாவட்டம் நரசிங்கப்பட்டியில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும், விவசாயிகளும் ஒன்று திரண்டு நடத்திய பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாண்டிருக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எதிர்க்கட்சிகள் நடத்தும் அறவழிப்போராட்டத்திற்கு அனுமதி மறுத்து தலைவர்களை கைது செய்த நிலையில், மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு எதிராக திமுக இன்று நடத்திய போராட்டத்திற்கு மட்டும் இரவோடு, இரவாக அனுமதி வழங்கியிருப்பதன் மூலம் தமிழக காவல்துறை முழுவதும் திமுகவின் கைப்பாவையாகவே மாறிவிட்டதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என சட்டமன்றத்தில் வெளிப்படையாக அறிவித்த பின்னரும் மக்களின் போராட்டம் தொடர்வது தங்களின் மீதான நம்பிக்கை இல்லாததே காரணம் என்பதை திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்போது உணர்வார் ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தமிழர்களின் பாரம்பரியத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி மதுரை மக்கள் நடத்தும் அறவழிப் போராட்டத்திற்கு உரிய அனுமதியை வழங்குவதோடு, இனி வரும் காலங்களில் இதுபோன்ற சர்வாதிகார நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக வந்த நபர் உயிரிழப்பு – அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசு மருத்துவமனைகளால் கேள்விக்குறியாகும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வந்த நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆர்.எஸ்.மங்கலம் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி மாவட்ட தலைமை மருத்துவமனை வரையிலான அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையின் தொடர் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராமநாதபுரத்தில் ஆய்வு எனும் பெயரில் சுமார் 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், அங்கு மருத்துவர்கள் இருக்கிறார்களா ? என்பதை உறுதி செய்திருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். எனவே, அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவல நிலையில் காட்சியளிக்கும் அரசு மருத்துவமனைகளின் மீது இனியாவது கூடுதல் கவனம் செலுத்தி மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை போக்குவதோடு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.