உழைக்கும் மக்களின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் உழைப்பாளர்கள் தினத்தை உரிமையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ”செய்யும் தொழிலே தெய்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அன்றாட வாழ்வியலில் சமூக இயக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களையும், அவர்களின் உழைப்பையும் மே தின நன்னாளில் போற்றி மகிழ்வோம். “உழைப்பே உயர்வை தரும்… உழைப்பால் கிடைக்கும் பயனே மனநிறைவை தரும்” என்ற நம்பிக்கையோடு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வெற்றி நிச்சயம் எனக்கூறிக் கொண்டு உழைப்பாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்கள் – மாநிலத்தின் தலைநகரை கொலை நகராக மாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில் சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சென்னை ஆர்.கே.நகரில் இளைஞர் சரமாரி வெட்டிக்கொலை, மீஞ்சூர் பஜார் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு, தண்டையார் பேட்டையில் அடையாளம் தெரியாத கும்பலால் ஒருவர் படுகொலை என தமிழகத்தின் தலைநகரமான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், கள்ளச்சாராயம், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரத்தால் அடிக்கடி ஏற்படும் குற்றச்சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு முழு சுதந்திரத்தை வழங்கி குற்றச் சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

திமுகவின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்கா பறிமுதல் – வேலியே பயிரை மேய்வது போல போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் வெளிமாநிலங்களில் இருந்து 440 கிலோ குட்கா கடத்தி வந்ததாக திமுகவின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் போஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த பழனிசாமி ஆட்சிக்காலத்தில் குட்கா நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறி சட்டப்பேரவைக்கே குட்காவை எடுத்துச் சென்று குற்றம்சாட்டிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தற்போது முதலமைச்சரான பின் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவோ, ஒழிக்கவோ எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. 2000 கோடி ரூபாய் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடங்கி தமிழகத்தில் அடிக்கடி பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதன் மூலம் ஆளுங்கட்சியின் ஆதரவுடனே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதோ? என்ற ஐயம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தை இழந்து வரும் தமிழக இளைஞர்களை பாதுகாக்கும் வகையில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் கழக உடன்பிறப்புகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திறந்திடுமாறு வேண்டுகிறேன். தகுந்த இடங்களை தேர்வு செய்து எளிமையான முறையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளால் சுகாதாரமான முறையில் அமைக்கப்படும் குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்கள் சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திட வேண்டும்.

வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – சத்திய ஞானசபையின் மாண்பை குறைக்கும் வகையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நாள் முதல் இன்று வரை அத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் பொதுமக்கள் மற்றும் வள்ளலாரின் பின்பற்றாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்து பிடிவாதப் போக்கில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. எனவே, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கும், பக்தர்களுக்கும் எதிரான வகையில் நடைபெறும் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, கடலூர் மாவட்டத்திலேயே மாற்று இடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கனடாவில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் (FIDE Candidates Chess Tournament 2024) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (D Gukesh) அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற பெருமையை நிகழ்த்தியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 17 வயதான குகேஷ் அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூட நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை கண்ணகி நகரில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்யச் சென்ற காவலர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தொடங்கி அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதாக எழும் பொதுமக்களின் புகார்களின் மீது தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு நடைபெறும் கஞ்சா விற்பனை தொடர்பான பொதுமக்களின் புகார்களை அலட்சியாக எதிர்கொண்டதன் விளைவாக, தற்போது காவல்துறையினர் மீதே கஞ்சா வியாபாரிகள் தாக்குதல் நடத்தும் அளவிற்கு அசாதாரண சூழல் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதோடு, காவலர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.