கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத்திடல்களை தனியார் வசம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது – விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்கள் மற்றும் 595 பூங்காக்களை தனியார் வசம் குத்தகைக்கு விடுவதற்கான தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விளையாட்டுத் திடல்களை தனியார் வசம் ஒப்படைப்பதோடு, அதனை பயன்படுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.120 கட்டணமாக நிர்ணயித்திருப்பது ஏழை எளிய வீரர், வீராங்கனைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு அவர்களின் விளையாட்டு எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஷெனாய்நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தை தனியாருக்கு தாரை வார்த்திருப்பதோடு அதற்கான வாடகையையும் உயர்த்தியிருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் மக்கள் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, விளையாட்டுத்திடல்கள், பூங்காக்கள் மற்றும் அரங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் விரோத தீர்மானங்களை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.

தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்! தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை தன் கொடுஞ்செயல்களால் பெரும் துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசுரன் எனும் ஈவு இரக்கமற்ற அரக்கனை திருமால் அழித்த தினமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள், அனைவரது வாழ்விலும் இருள் விலகி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் அமையட்டும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நீதியை உணர்த்தும் இந்த தீபாவளித் திருநாளில் மக்களை சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் விலகி அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் எனக்கூறி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் – தமிழகத்தை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மையமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே 27 கோடி ரூபாய் மதிப்பிலான 2.7 கிலோ மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இருவரை கைது செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் நாளுக்கு நாள் பெருகிவரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை கட்டுப்படுத்தாமல் தமிழகத்தை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மையமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கொடியவகை போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்கவோ, பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் அவற்றை அடியோடு ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஆண்டுதோறும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியை மட்டும் ஏற்பது எந்தவகையிலும் பயனளிக்காது. எனவே, கும்பகர்ண தூக்கத்தில் இருந்து இனியாவது கண்விழித்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில் நர்சிங் படிக்காதவர்களை செவிலியர்களாக நியமிக்கத் திட்டமா? பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நலத்தோடு விளையாடும் சென்னை மாநகராட்சியின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. நர்சிங் படிப்பு படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கிவரும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக நியமிக்க முடிவு செய்து அது தொடர்பாக வட்டார துணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் செவிலியர்கள் நியமனத்திற்கான தகுதிகளை எந்தவித முன்னறிவிப்புமின்றி மாற்றியதோடு, நர்சிங் படிக்காதவர்களை பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே செவிலியர்களாக நியமிக்க முயற்சிக்கும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. ஊட்டச்சத்து ஆலோசனை வழங்குவதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் பயிற்சி வழங்கப்பட்டிருப்பவர்களை செவிலியர்களாக நியமித்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் குறைபாடுகள் ஏற்படுவதோடு நோயாளிகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாவர்கள் என எம்.ஆர்.பி செவிலியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. எனவே, போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்களை பணிமூப்பு அடிப்படையில் செவிலியர்களாக நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தேர்வாணையத்தின் மூலம் முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்களையே செவிலியர்களாக நியமிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.

மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மதுரை மாநகரம் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மதுரையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் மாநகரத்தின் பெரும்பாலான குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மதுரை கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், உணவு, பால், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படாதது கடும் கண்டனத்திற்குரியது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், மழைநீர் செல்வதற்கான கால்வாய்களையும், ஓடைகளையும் முறையாக தூர்வாராததுமே பாதிப்புக்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதோடு, இனிவரும் பெருமழைக் காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு எதிராக கொந்தளித்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? சென்னைத் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக கூறி அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மீது இனவாத கருத்துக்களை முன்வைத்த முதலமைச்சர் அவர்களும், ஆளுநர் அவர்களின் வயது மற்றும் பொறுப்பைக் கூட உணராமல் பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த துணை முதலமைச்சர் அவர்களும் தற்போது நடைபெற்றிருக்கும் தமிழ்த்தாய் அவமதிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? துணை முதலமைச்சர் தலைமை தாங்கிய நிகழ்வில் அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்ப்பற்று மற்றும் தாய்மொழிப்பற்று எனும் திமுக அரசின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து செல்லாமல், அதற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.