இணையதள வாயிலாக கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் இருமடங்கு உயர்வு – தமிழக மக்களை மென்மேலும் துயரத்திற்குள்ளாக்கும் திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட சுயசான்று அடிப்படையில் இணையதளம் வாயிலாக கட்டுமானத் திட்ட அனுமதி பெறும் நடைமுறையின் கீழ், வீட்டு வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் இருமடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உதாரணத்திற்கு 8,900 சதுர அடியில் கட்டப்படும் கட்டடங்களுக்கு கடந்த மாதம் 4.5 லட்ச ரூபாய் கட்டணமாக செலுத்திய நிலையில், தமிழக அரசின் இந்த புதிய நடைமுறைக்கு பின்னர் தற்போது 9.5 லட்ச ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியிருப்பதாகவும் அதனால் வீடுகளின் விலை உயர வாய்ப்பிருப்பதாகவும் கட்டுமானத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, சொத்துவரி, பதிவுக்கட்டணம், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என அடுத்தடுத்த பாதிப்புகளை சந்தித்துவரும் தமிழக மக்களுக்கு, வீட்டு வரைபட கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டணமும் இருமடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பேரிடியாக விழுந்துள்ளது. கட்டட அனுமதி பெறுவதற்கான நடைமுறையை எளிதாக்குகிறோம் எனும் பெயரில் அதற்கான கட்டணங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தியிருப்பது, சொந்த வீடு எனும் கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம் ஆகும். எனவே, தமிழக மக்களை மென்மேலும் துன்பத்திற்குள்ளாக்கும் வீட்டு கட்டட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சுயசான்று அடிப்படையில் ஏற்கனவே இருந்த கட்டண நடைமுறையையே பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை – வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே 100 சதவிகிதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்துவரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகரில் எந்தவித ஒருங்கிணைப்புமின்றியும் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில், சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக அங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால், அதில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சென்னையில் 95 சதவிகிதம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக பொய்கள் கூறுவதும், மழை பாதிப்புக்கு பின்னர் புதுப்புது காரணத்தை சொல்லி சமாளிப்பதையுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசு, இம்முறையும் எதாவது காரணத்தைச் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. சென்னை மாநகராட்சி சார்பில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், முறையாக நடைபெறவில்லை என்பதை, அப்பணிகளுக்காக தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கும் பள்ளங்களும், அதனால் ஆண்டுதோறும் ஏற்படும் விபத்துக்களும், உயிரிழப்புகளுமே உணர்த்துகின்றன. எனவே, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் நாள்தோறும் அரங்கேறும் படுகொலைச் சம்பவங்கள் – அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைகள் நிறைந்த மாநிலமாக மாற்றியிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. கோவையில் வழக்கறிஞர், தருமபுரியில் உணவக ஊழியர், நாகப்பட்டினத்தில் ஏலச்சீட்டு நடத்தி வந்த பெண், புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் என கடந்த சில தினங்களில் மட்டும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை கூலிப்படைகள் மற்றும் அடையாளம் தெரியாத கும்பல்கள் மூலமாக திட்டமிட்டு கொலை செய்யப்படுவதும், பின்னர் கொலையை செய்ததாக ஒருசிலர் தாமாக முன்வந்து சரணடையும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருவது தமிழக காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிப்படுத்துகிறது. இன்று கூட திருச்சியில் காவிரி ஆற்றை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவரை, அப்பகுதியில் சட்டவிரோதமாக போதைப் பொருட்களை உட்கொண்டிருந்த கும்பல் கடுமையாக தாக்கியதில் அம்மாணவர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவோடு நடைபெறும் போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை அடியோடு தடுத்து நிறுத்த பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், இளைஞர்கள் பலர் போதைப் பழகத்திற்கு அடிமையாகி ஐந்தாயிரத்திற்கும், பத்தாயிரத்திற்கும் கூலிப்படைகளாக மாறி கொலை செய்யும் அளவிற்கான சூழலும் உருவாகியுள்ளது. இதயதெய்வம் அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தில் தற்போது நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையவோ, குற்றவாளிகளை கண்டறியவோ நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தில் நடைபெறும் கொலைச் சம்பவங்கள் ஆதாயத்திற்காகவும், பழிக்குப் பழி வாங்கவும் நடைபெறுவதாக கூறும் தமிழக அமைச்சர்களின் பொய்களை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். எனவே, எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் காவல்துறையை இனியாவது சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அடிமை வாழ்க்கையை அறவே வெறுத்து, நாட்டு மக்களின் நலமே தன் நலம் என முழங்கி ஆங்கிலேயப் பெரும்படைகளை பலமுறை புறமுதுகிட்டு ஓடச் செய்த மாமன்னரும், சுதந்திர போராட்ட வீரருமான மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் இன்று. இளம் வயதிலேயே தனது வீரத்தாலும், அசாத்திய திறமையாளும் ஆங்கிலேய ஆதிக்கத்தை அதிரச் செய்ததோடு, தன் இறுதி மூச்சுவரை நாட்டு விடுதலைக்காக போரிட்டு வீரமரணம் அடைந்த தீரன் சின்னமலை அவர்களின் வீரமும், துணிச்சலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தெளிவூட்டும் வரலாறாக என்றென்றும் நிலைத்து நிற்கும்.

திருப்பூர் மாநகராட்சி பள்ளி கழிவறைக்குள் ஒருமாத காலமாக தங்கவைக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள் – வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்தித் தராத திருப்பூர் மாநகராட்சியின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது. திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்குள், தனி அறை ஒன்றில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கி அங்கேயே உணவு சமைத்து உட்கொள்வது போன்று வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, தங்குவதற்கான இடத்தைக் கூட ஒதுக்காமல் கடந்த ஒரு மாத காலமாக மாநகராட்சி பள்ளி கழிவறையிலேயே தங்க வைத்திருந்தது முழுக்க முழுக்க மனிதநேயமற்ற செயலாகும். எனவே, பொதுக்கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தருவதோடு, இந்த விசயத்தில் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கோவை மாநகராட்சி பள்ளி வகுப்பறையில் அமர்ந்து மது அருந்திய மாணவர்கள் – எதிர்கால இளைய சமுதாயம் தடம் மாறி தவறான பாதையில் பயணிப்பதை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. கோவை மாநகராட்சி பள்ளி ஒன்றில் பதினொன்றாம் பயிலும் மூன்று மாணவர்கள் உடற்கல்வி வகுப்பு நேரத்தில், வகுப்பறைக்குள் அமர்ந்து குளிர்பானத்தில் மதுவை கலந்து அருந்தியதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. புத்தகங்களும், பேனாக்களும் இருக்க வேண்டிய கைகளில் அண்மைக் காலமாக மதுபாட்டில்களும், போதைப் பொருட்களும் தாராளமாக புழங்குவதாக வரும் செய்திகளை பார்க்கும் போது இளைய தலைமுறையான பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை கட்டுப்படுத்தவோ, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வோ ஏற்படுத்தாதன் விளைவாக பள்ளி வகுப்பறைக்குள்ளே அமர்ந்து மாணவர்கள் மது அருந்தும் அளவிற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், சமுதாயத்தில் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசு நிர்வாகம், அதனை செய்யத் தவறியதால் சிறு வயதிலேயே மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி ஆசிரியர்களை கேலி செய்வதும், தாக்குதல் போன்ற அநாகரீகமான செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகின்றன. எனவே, மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களை, அதிலிருந்து மீட்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் இருக்கிறது என்பதை இனியாவது உணர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே இயங்கி வரும் மதுபானக்கடைகளை உடனடியாக அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மாயமான தமிழக மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு – இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்குவந்த இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் படகு கடலில் மூழ்கி 4 மீனவர்கள் மாயமான நிலையில், அதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் மீன் பிடித்து கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் என இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்துவந்த இலங்கைக் கடற்படையினரின் அராஜகத்தை கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக, தற்போது மீன்பிடி படகுகள் மீது மோதி, தமிழக மீனவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் மாயமான தமிழக மீனவர்களை மீட்கும் பணியை விரைவுபடுத்துவதோடு, இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை களைய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு தனியார் நிறுவனத்தின் கார்பந்தயத்தை நடத்த தீவிர முனைப்பு காட்டுவது ஏன் ? – சென்னையின் மையப்பகுதியில் கார் பந்தயத்தை நடத்தி பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்குவது தான் திமுக அரசின் நோக்கமா ? சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த தனியார் நிறுவனத்தின் பார்முலா – 4 கார் பந்தயம், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் திமுகவினருக்கு தொடர்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, என ஒட்டுமொத்த தமிழக மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் திமுக அரசு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி கார்பந்தயம் நடத்த தீவிரம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது. தனியார் நிறுவனம் நடத்தும் கார் பந்தயத்திற்காக கடந்த ஆண்டே தமிழக அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட மக்களின் வரிப்பணமான 40 கோடி ரூபாய்க்கான செலவு விவரங்கள் இதுவரை வெளிவராத நிலையில், தற்போது விளம்பரதாரர்கள் எனும் பெயரில் கட்டாய நிதி வழங்கும் படி தொழிலதிபர்களையும், தொழில் நிறுவனங்களையும் திமுக அரசு கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் ஏற்படும் சிக்கல், பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம் என அடுத்தடுத்து நெருக்கடிகளால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், ஒரு சிலரின் விருப்பத்திற்காகவும், லாபத்திற்காகவும் நடத்தப்படும் கார் இந்த பந்தயத்திற்காக கட்டாய நிதி வழங்குமாறு அழுத்தம் கொடுப்பது தொழில் நிறுவனங்களை முற்றிலுமாக முடக்கும் செயலாகும். கார் பந்தயங்களை நடத்துவதற்கென சென்னை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் பிரத்யேக மைதானம் இருக்கும் நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அண்ணாசாலை, துறைமுகம் என எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் சென்னையின் மத்தியப் பகுதி சாலைகளைச் சுற்றி கார்பந்தயம் நடத்தியே தீருவோம் என விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பிடிவாதம் காட்டுவது ஏன் ? எனவே, தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை சென்னை அல்லாத புறநகர் பகுதியில் மக்களுக்கு எந்தவித பாதிப்பையும், இடையூறுகளையும் ஏற்படுத்தாத வகையில் நடத்துவதோடு, பல கோடி ரூபாய் செலவில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தினால் தமிழக மக்களுக்கும் அரசுக்கும் கிடைக்கப் போகும் பயன் என்ன ? என்பதை விளக்கிடுமாறு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.