பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தலைசிறந்த படைத்தளபதியும், போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத மாவீரராக திகழ்ந்தவருமான விடுதலை போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் சரணடைய விருப்பமின்றி தாய் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளும் தற்கொலைப்படை வீரராக மாறி வீரமரணமடைந்த சுந்தரலிங்கனார் அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம்.

திருநெல்வேலி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவர் – பள்ளி மாணவர்கள் மத்தியில் வேரூன்றியிருக்கும் வன்முறையை அகற்றி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டியது திமுக அரசின் கடமை. திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் இயங்கிவரும் பள்ளி ஒன்றின் வகுப்பறைக்குள்ளாக நடைபெற்ற மோதலில் மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மோதல் சம்பவத்தை தடுக்க முயன்ற பள்ளி ஆசிரியர் மீதும் நடைபெற்றிக்கும் தாக்குதல் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணம் இரு மாணவர்களிடையே பென்சில் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு என காவல்துறையினர் கூறியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. நாங்குநேரி அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் வீடுபுகுந்து சக மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடங்கி அடுத்தடுத்து அரங்கேறும் இதுபோன்ற மோதல் சம்பவங்களும், வன்முறை நிகழ்வுகளும் பள்ளி மாணவர்கள் மத்தியில் வன்முறை எந்தளவிற்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதையே வெளிச்சம்போட்டு காட்டுகிறது. எனவே, இச்சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டிய பள்ளிகளில், இத்தகையை சம்பவங்கள் தொடராத வகையில் பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சமுதாயத்தின் அடித்தளத்தில் உதித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமை சிற்பியாக விளங்கியவரும், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவருமான சட்டமேதை டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. சுதந்திர போராட்ட வீரராக, தலைசிறந்த அரசியல்வாதியாக, சுயமரியாதை சுடரொளியாக, ஆற்றல் மிக்க எழுத்தாளராக, சட்ட மாமேதையாக மக்களுக்காகவே வாழ்ந்த டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றிட அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

புத்தாண்டு திருநாளாம் விஷு திருநாளை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடும் மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விஷு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் தங்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிப் பராமரித்து இறைவனை மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடும் மலையாள மக்கள் அனைவரின் எண்ணங்களும், விருப்பங்களும் ஈடேறும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும். மலரும் இப்புத்தாண்டு மலையாள மக்கள் அனைவரின் இல்லங்களிலும் இன்பமும், இனிமையும் செழிக்கின்ற ஆண்டாக அமையட்டும் என பிரார்த்தித்து மீண்டும் ஒருமுறை எனது விஷு திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் – பொதுமக்களின் உடல் நலனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி பொது உயிரி மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இந்த மருத்துவக் கழிவுகள் சுத்திகரிக்கும் ஆலை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அத் திட்டத்திற்கான கட்டுமானப் பணியை முழுவீச்சில் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பொது உயிரி மருத்துவக் கழிவுகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மைமிக்க வாயு, மானாமதுரை மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொது உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்வதோடு, அங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – இனியும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா ? என்பதை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சிந்திக்க வேண்டும். பெண்களை அவமதிக்கும் வகையிலும் சைவம், வைணவம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலுமான தமிழக வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களின் தரக்குறைவான பேச்சு தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவச பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பஸ் என விமர்சித்ததோடு, பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஆணவத்துடன் பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் அமைச்சர் திரு.பொன்முடி அவர்களின் செயல்களை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டும் காணாமல் இருந்ததே, தற்போது மேடை ஏறி பெண்கள் குறித்து இத்தகைய அருவருக்கத்தக்க அளவிற்கு பேசும் துணிச்சலை உருவாக்கியுள்ளது. எனவே, அருவருக்கத்தக்க வகையில் பொதுவெளியில் மகளிர் குறித்து பேசியிருக்கும் வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள், இனியும் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா? என சிந்திப்பதோடு, பெண்கள் எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை தங்களின் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கை திசைதிருப்ப முயன்ற தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு வரவேற்புக்குரியது – மாநிலத்தின் ஆளுநருக்கான அதிகாரத்தை தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாராட்டுதலுக்குரியது. அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதல் படியே மாநிலத்தின் ஆளுநர் நடக்க வேண்டும் என்பதோடு, குடியரசுத்தலைவருக்கு இருப்பதை போன்று மசோதாக்களை கிடப்பில் வைப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்பதையும் நேற்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில், டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை திசைதிருப்பும் வகையிலும், வழக்கில் சிக்கியுள்ளவர்களை பாதுகாக்கும் நோக்கிலும், வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் வைத்திருக்கும் கொட்டு மிக மிக அவசியமானது. நேற்று ஒரே நாளில் இருவேறு வழக்குகளில் கிடைத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கியும் ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவோர் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை பின்பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணவேந்தர் பதவியிடங்களை உடனடியாக நிரப்பும் அதே நேரத்தில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்புடையவர்களை தப்பிக்க முயலாமல் விசாரணையை நேர்மையாகவும், நியாயமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.