அரசுப் பணியாளர்களை புறந்தள்ளிவிட்டு ஆலோசகர்களை நியமித்து ஆட்சியை நடத்த முயற்சிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது – சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எதிராக செயல்படுவது தான் திராவிட மாடலா? தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை அரசின் அனைத்துத் துறைகளிலும் எந்தவித வரைமுறையும், வழிகாட்டுதலுமின்றி ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும், அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்துவதிலும் அச்சாணிகளாக பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தையும், திறமையையும் புறந்தள்ளிவிட்டு ஆலோசகர்களை நியமித்து கொள்கை முடிவுகளை மேற்கொள்ள முயற்சிக்கும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிலவும் 3.5 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அரசுப் பணிக்கு எந்தவித தொடர்பும் இல்லாத ஆலோசகர்களை நியமிப்பது சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எதிரான நடவடிக்கை என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் நடைபெற்று வரும் ஆலோசகர்களின் நியமனங்களை முற்றிலுமாக கைவிடுவதோடு, அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயரும் சுங்கச்சாவடி கட்டணம் – சாமானிய மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்படும் 36 சுங்கச்சாவடிகளில் கடந்த ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவிகிதம் வரை கட்டண உயர்வை அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திருச்சி மாவட்டம் சமயபுரம்,சேலம் மாவட்டம் ஓமலூர் என 25 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வரவிருக்கும் புதிய நடைமுறையால் ஏற்கனவே வசூலிக்கப்படும் கட்டணத்தோடு, ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்வதோடு, சாமானிய பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி அனைத்து விதமான அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கசாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் ஒரு மின்சாரப் பேருந்தை கூட வாங்காத திமுக அரசு – ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் புதிய பேருந்துகளை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கும் திமுக அரசு, கடந்த மூன்றாண்டுகளில் 892 பேருந்துகள் மட்டுமே வாங்கியிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் ஆங்காங்கே பழுதாகி நிற்பதும், ஓடிக் கொண்டிருக்கும் போதே அதன் பாகங்கள் கழண்டு விழுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், அப்பேருந்துகளில் பயணிக்கக் கூடிய பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அரசுப்போக்குவரத்துக் கழகங்களில் இயங்கிவரும் ஒட்டுமொத்த பேருந்துகளில் 50 சதவிகித பேருந்துகள் காலாவதியான நிலையில், அதனை சீரமைக்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. 2022-23 நிதிநிலை அறிக்கையில் 500 மின்சாரப் பேருந்துகளும், 2024 -25 நிதிநிலை அறிக்கையில் 500 மின்சாரப் பேருந்துகளும் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை ஒரு மின்சாரப் பேருந்தை கூட வாங்காதது ஏன் ? நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே சென்றது ? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தொழிற்சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். எனவே, ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட போக்குவரத்துத்துறையில் நிகழும் நிர்வாக சீர்கேடுகளை களைவதோடு, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தி உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்து! உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். “நான் அனைத்து உயிர்களிடத்தும் சமமானவன், எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன்” என்று பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ண பகவான் எடுத்துரைத்த வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றிட இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில் தர்மம் செழிக்கவும், அறம் வளரவும், அனைவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கவும் மீண்டும் ஒருமுறை எனது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பத்திருக்கும் கர்நாடக அரசு – காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் விண்ணப்பதை மத்திய அரசு ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் தயாரிப்பதற்கான அனுமதி வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளையும், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அடியோடு பறிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதப் போக்குடன் செயல்படும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. கீழ் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு என்ற பெயரில் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருக்கும் கர்நாடக அரசின் செயல்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. ஒவ்வொரு பாசன ஆண்டிலும் ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரையிலான முக்கியமான காலகட்டத்தில் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசாலும், தமிழகத்திற்கான நீரை கேட்டுப் பெற முடியாத திமுக அரசாலும் தமிழகத்தின் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தின் உயிர் நாடியாக திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நியாய விலைக்கடைகளில் மீண்டும் மீண்டும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு – சாமானிய பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான பருப்பு மற்றும் பாமாயிலுக்கு மீண்டும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் நியாய விலைக்கடைகளில் பருப்பு, மற்றும் பாமாயிலுக்கு தட்டுப்பாடு எழுந்த நிலையில், அதனை சீர்செய்ய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத திமுக அரசால் ஏழை, எளிய பொதுமக்கள் தற்போது மீண்டும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் அளவு உயர்த்தப்படுவதோடு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வந்த பாமாயில் மற்றும் பருப்பு விநியோகத்தையும் நிறுத்த முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு, பாமாயிலை வாங்குவதற்காக நியாய விலைக்கடைகளுக்கு வரும் சாமானிய மக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையில், ஒரு சிலர் நியாய விலைக்கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, நியாயவிலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அரசு மருத்துவமனைகளால் கேள்விக்குறியாகும் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு – சாமானிய மக்கள் நலனில் சிறிதும் அக்கறையற்ற மருத்துவத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றும் தூய்மைப் பணியாளர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி என அரசு மருத்துவமனைகளின் அவலநிலை குறித்து நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய பொதுமக்களை, தனியார் மருந்தகங்களில் இருந்து ஊசி மற்றும் மருந்துகளை வாங்கி வரச் சொல்லி அலைக்கழிக்கப்படுவதாக வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் இன்றைய நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அரசு மருத்துவமனையில் நிலவும் அடிப்படை வசதியின்மை, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு தொடர்பாக எழும் புகார்களை பலமுறை சுட்டிக்காட்டியும், அதனைப் போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மருத்துவத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பையும், தரத்தையும் மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், விளம்பரத்தில் மட்டுமே குறியாய் இருக்கும் திமுக அரசால் சாமானிய மக்கள் அரசு மருத்துவமனைக்கு வரவே அச்சப்படும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, அடித்தட்டு விளிம்பு நிலை மக்களுக்கும் தரமான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.