பல்லுயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் – பத்து மாத காலமாக தூங்கிவிட்டு பதவியை விட்டு விலகுவேன் என நாடகமாடிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாபட்டி மற்றும் நாயக்கர்பட்டி பகுதிகளில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அரசின் சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் விளக்க குறிப்பு திமுக அரசின் இரட்டை வேட முகத்திரையை கிழிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு கோரிய அனைத்து விவரங்களையும் வழங்கி, அந்த சுரங்கம் அமைய அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருந்துவிட்டு மக்கள் எதிர்ப்புக்கு பின் பிரதமருக்கு கடிதம் எழுதுவது போல முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் நடத்திய கபடநாடகமும் பொதுமக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில் தொடங்கி, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏல அறிவிப்பு வெளியானது முதல் கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் தேதி ஏலம் முடிவுக்கு வரும் வரை சுமார் பத்து மாத காலம் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, மக்களின் தொடர் போராட்டத்திற்கு பின் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றுவதும், பதவியை விட்டு விலகுவேன் என முழங்குவதும் மக்களை ஏமாற்றும் செயலே தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அதே நேரத்தில், பல்லுயிர்ப் பெருக்கம் சார்ந்த பகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசின் சுரங்கத்துறை அறிவுறுத்தியிருக்கும் நிலையில், இத்திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டால் மட்டுமே மேலூர் தாலுக்காவில் உள்ள தொல்லியல் சின்னங்களும், இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பல்லுயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தமிழர்களின் பண்டைய கால வரலாற்றையும் அழிக்கும் வகையிலான டங்ஸ்டன் திட்டத்திற்கான அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில், மக்கள் விரும்பாத இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு பிள்ளையார்சுழி போட்டு மாபெரும் துரோகம் இழைத்த திமுக அரசும், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் மதுரை மாவட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவா ? – மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில வேண்டிய சூழலை உருவாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருக்கும் இந்த விரும்பத்தகாத சம்பவம் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மாநிலத்தின் தலைநகரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம், தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் மாணவிகள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் ஒட்டுமொத்த குணநலன்களையும் குவியப் பெற்ற பொன்மனச் செம்மல், நல்லாட்சியை வழங்குவதில் நாட்டிற்கே வழிகாட்டியாக திகழ்ந்த மாபெரும் தலைவர், தமிழக மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுதினம் இன்று. கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக, ஏழைப் பங்காளராக, எளியோரின் நண்பராக, உழைக்கும் வர்க்கத்தின் உற்றத் தோழனாக அடித்தட்டு மக்களின் பேரன்பையும் பேராதரவையும் பெற்ற புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

திருநெல்வேலியில் நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை – தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் சாட்சி! திருநெல்வேலியில் நீதிமன்ற வாசலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற கதவுகளை இழுத்து மூடி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தொடர்கதையாகிவிட்டது. இதற்கு திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலுமே காரணம் என்று மக்கள் உரத்தக் குரலில் சொல்ல தொடங்கி விட்டனர் . விடியலை தருவோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல்துறையைக் கூட முறையாக கையாள முடியவில்லை என்பதும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதும் தினம் தினம் நிரூபணமாகிவருகிறது. இந்நிலையில் மீதமிருக்கும் சில மாதங்களாவது தமிழக மக்களின் மீது உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு அவர்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு தரக்கூடிய ஒரு அரசாக தமிழக அரசு இருந்திடவும்; தொடர்ந்து இதுபோல கொலை கொள்ளை சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.