July 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்த்து போராடி இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வீரரும், காட்டாலங்குளத்து மாமன்னருமான அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்ததினம் இன்று. தாய் மண்ணின் உரிமைக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறுதி மூச்சு வரை போராடி வீரமரணமடைந்த மாவீரர் அழகுமுத்துகோன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
July 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – அரசுக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் பல்லாயிரக்கணக்கான பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 60 சதவிகிதம் பேராசிரியர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், தற்போது பணியில் இருக்கும் பேராசிரியர்களையும் மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் வகையில் தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை கடும் கண்டனத்திற்குரியது.பாடப்புத்தகங்களை தயாரித்து விநியோகிப்பது, விடைத்தாள் திருத்துவது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுவது என பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசியர்களை இடமாற்றம் செய்வது, அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை பாதிப்பதோடு, வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல்கலைக்கழகத்தின் அங்கீகாரமும் ரத்தாக வாய்ப்பிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் தொடங்கி பேராசிரியர்கள் வரை நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, காலியாக இருக்கும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
July 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் பூரண உடல்நலத்துடன் விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். கேட் கீப்பரின் கவனக்குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்திருக்கும் புகார் மீது கூடுதல் கவனம் செலுத்தி இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய ரயில்வே துறையை வலியுறுத்துகிறேன்.
July 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு : ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மற்றும் சமூக விடுதலைக்காக எவ்வித சமரசமுமின்றி தன் வாழ்நாள் முழுவதும் போராடிய மகத்தான தலைவர் திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். – தலைமைக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.
July 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக அரசின் அலட்சியப்போக்கால் நடப்பாண்டில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்திருக்கும் மா விவசாயிகள் – பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை வழங்குவதோடு மாம்பழங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை திமுக அரசு நிர்ணயிக்க வேண்டும்.தமிழகத்தில் மாங்காய் உற்பத்திக்கு நடப்பாண்டில் நியாயமான விலை கிடைக்காததாலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிவடைந்துவிட்டதாக ஒதுங்கிக் கொண்ட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களாலும் நடப்பாண்டில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டை சந்தித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் தமிழகம் திரும்பிய பின்னரும் மா பிரச்னைக்கு தீர்வு காணப்படாதது விவசாயிகள் மீதான திமுக அரசின் அக்கறையின்மையையே வெளிப்படுத்துகிறது. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து அம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் ஊக்கத்தொகை அறிவித்திருக்கும் நிலையில், திமுக அரசும், அதன் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் மா உற்பத்தியை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆயிரக்கணக்கான மா விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.பருவநிலை மாற்றம், நோய் மற்றும் பூச்சித் தாக்குதல், விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நடைபெற்று வரும் மா விவசாயத்தை பாதுகாக்கவோ, உரிய இழப்பீடு வழங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியப் போக்கால் நடப்பாண்டில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை பின்பற்றி தமிழகத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக அறிவிப்பதோடு, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை போல மாம்பழங்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மற்றும் சமூக விடுதலைக்காக எவ்வித சமரசமுமின்றி தன் வாழ்நாள் முழுவதும் போராடிய மகத்தான தலைவர் திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. வழக்கறிஞராக, அரசியல்வாதியாக, சமூக சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக பன்முகத்தன்மை கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஆற்றிய அரும்பெரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
July 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் நிறுவனரும் மூத்த தமிழறிஞருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தமிழுணர்வை உலகம் முழுவதும் பரப்ப அரும்பாடுபட்ட செந்தமிழ்க் கவிமணி வா.மு.சேதுராமன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
July 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஊழியர்கள் பற்றாக்குறையால் நடப்பாண்டில் மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடல் – மழலைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து தேவையை கேள்விக்குறியாக்கிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் நிலவும் காலிப்பணியிடங்களால் நடப்பாண்டில் மட்டும் சென்னை, கோவை, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தைகளின் முன்பருவக்கல்வியோடு அவர்களின் முழுமையான வளர்ச்சியையும் உறுதி செய்யும் நோக்கத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் அங்கு பயிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை கல்வி முழுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்திற்கும் அதிகமான அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சுமார் 28 ஆயிரம் ஆசிரியர் மற்றும் சமையலர் பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும், பல அங்கன்வாடி மையங்களில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவதால் உணவு தயாரிப்பது, கர்ப்பிணி பெண்களின் கையேடுகளை பராமரிப்பது என அனைத்து வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டியிருப்பதால் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு குழந்தைகளின் முன்பருவக்கல்வியும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையையும் உருவாக்கியுள்ளது. எனவே, தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் நிலவும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, மழலைக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி மற்றும் தரமான ஊட்டச்சத்து உணவு அங்கன்வாடி மையங்களில் முறையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய தேசத்தின் தலைசிறந்த ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தவரும், மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை எத்தகைய நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தியவருமான சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவுதினம் இன்று. அளவு கடந்த அறிவையும், மன வலிமையையும் கொண்டு, ஈகை குணத்திற்கும் தலைமைப் பண்பிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் விரும்பிய ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
July 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிப்காட் தொழிற்பேட்டைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது – விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சிப்காட் விரிவாக்க திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.திருவண்ணாமலையில் விளைநிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நில எடுப்பு அலுவலகத்தில் கடந்த இரு தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரண்டு சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க செய்யாறு வட்டத்தில் உள்ள மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, மணிப்புரம் என 12 கிராமங்களை உள்ளடக்கிய விளைநிலங்களை கையகப்படுத்தியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத திமுக அரசு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறுத்தி காவல்துறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது ஈவு இரக்கமற்ற செயலாகும். தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 43வது வாக்குறுதியாக, விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்படாது என உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு உயிரை விட்டாலும் விடுவோம் எங்களின் விளைநிலத்தை விட்டுத்தரமாட்டோம் எனக்கூறும் விவசாயிகளை கைது செய்து அடக்குமுறையை ஏவியிருப்பது அவர்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகம் ஆகும்.எனவே, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.