ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும்,தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி திரு.வீர முத்துவேல் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருவது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவ தரைப்பரப்பில் தண்ணீர் இருக்கிறதா என்பது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் இலக்கு வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தியா மேற்கொண்டுள்ள சந்திரயான் 3 திட்டத்தின் விண்வெளிப்பயணம் அதன் இலக்கை அடைவதுடன் நிலவு குறித்த சர்வதேச நாடுகளின் ஆராய்ச்சியில் இந்தியா முதன்மை பெறவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாகும்.

டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அத்துறையின் அமைச்சர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக மூடி, நிரந்தர மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் உரத்தக் குரல் எழுப்பிவரும் இச்சூழலில், டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது என்பது மக்களை குடிபோதைக்கு வலுக்கட்டாயமாக தள்ளுவதற்குச் சமமாகும். கூலி வேலைக்கு செல்வோர் உட்பட கடின வேலை செய்பவர்களுக்காக காலை நேரத்திலேயே மதுக்கடைகளை திறப்பது என்பது நியாயமா? ஏற்கனவே, தமிழ்நாட்டில் மது போதையினால் வேலைத்திறன் வெகுவாக குறைந்து வருவதை அரசு உணர்ந்துள்ளதா? ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் நேரத்தில் பரப்புரை செய்துவிட்டு, அதற்கு மாறாக நாள் முழுவதும் மதுக்கடைகளை திறக்க முயல்வது ஏற்புடையதல்ல. ஆகவே, மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதும், மனநலம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மதுவிற்கு அடிமையானோரைக் கண்டறிந்து மறுவாழ்வு முகாம்களில் சிகிச்சை அளித்து அவர்களை மீட்டெடுப்பதே தற்போதைய தேவையாக இருக்கும். அதை விடுத்து, மதுவை 90 ML பாக்கெட்களில் விற்றாலோ மற்றும் வேலைக்கு மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் நேரத்தில் மதுபானக் கடைகளைத் திறந்தாலோ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களைத் திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பருவம் தப்பி பெய்த கனமழை காரணத்தினால் உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கனமழை காரணமாக உப்பு பாத்திகளில் இருந்து உப்பு அறுவடை செய்ய முடியாததால் உப்பளத்தை சார்ந்த சிறு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி, சரக்கு லாரிகளை நம்பி இருக்கும் ஓட்டுநர்கள், தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயிர்காப்பீடு போல உப்பள காப்பீடு திட்டம் செயல்படுத்தி இத்தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட உப்பளங்களை முழுமையாக மதிப்பீடு செய்து உப்பள உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் வாழ்வாதாரம் இழந்துள்ள உப்பள தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்த சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் இன்று. எட்டையபுர மன்னரின் முக்கிய தளபதியாகத் திகழ்ந்து, மன்னர்,பாமர மக்கள் உள்ளிட்டோர் மீது போர் தொடுத்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர் அழகுமுத்துக்கோன் அவர்கள். அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட சுதந்திர மனிதனாய் உயிரைவிடுவோம் என வீர முழக்கமிட்ட வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த இந்த நன்நாளில் அவரது விசுவாசம், அர்ப்பணிப்பு, தியாக உணர்வு ஆகியவற்றை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கு நேர்மாறாக தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது தகுதிப்படைத்த மகளிர் யார் என்ற அறிவிப்பை முதலமைச்சர் திரு.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். நியாயவிலை கடைகளில் முகாம் அமைக்கப்படும், அங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும், ஆதார் அட்டை,ரேஷன் அட்டை இல்லாத தகுதிவாய்ந்த மகளிரை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்டிருப்பது இந்தத் திட்டத்தை ஆளும்கட்சியினரின் தலையீடு இல்லாமல் முறையாக செயல்படுத்த முடியுமா? என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க ஆட்சி மீது எழுந்த அதிருப்தியை சரி செய்யவும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் வரிப் பணத்தில் இந்தத் திட்டத்தை அவசரகதியில் திமுக செயல்படுத்தத் துடிப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். அறிவிப்பது ஒன்றும், செயல்படுத்துவது வேறாகவும் இருப்பதே திமுக அரசின் பாரம்பரிய நடைமுறை என்பது இந்த விஷயத்திலும் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஆகவே வாக்குறுதி அளித்தபடி, மக்களை ஏமாற்றாமல் தெளிவான திட்டத்தோடு அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை நிபந்தனையின்றி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்சங்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன். தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர்களை நியமிப்பதற்கு அனைத்து தொழிற்சங்கத்தினரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பணிக்காக காத்திருக்கும் பல நூறு இளைஞர்களின் வயிற்றில் அடிக்கும் நோக்கத்தோடு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை நியமித்திருப்பதன் காரணம் என்ன? தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர் நியமனத்தைக் கைவிடும்படி அரசின் தொழிலாளர் நலத்துறையே அறிவுறுத்திய போதிலும் அதனை அரசு சார்ந்த துறையான மாநகர போக்குவரத்துக் கழகம் செயல்படுத்த மறுப்பது ஏன்? தொடர்ந்து தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதன் மூலம் மாநகர போக்குவரத்துக் கழகம் அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறதா என சந்தேகம் எழுகிறது. ஆகவே ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர் நியமனத்தை உடனடியாக ரத்து செய்து, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பதிவு செய்து நீண்டநாட்களாக காத்திருக்கும் தகுதியான நபர்களை ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு தேர்வு செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றேன்.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த திரு.விஜயக்குமார் ஐ.பி.எஸ் தற்கொலை செய்து கொண்ட செய்தி வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. 2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக திறம்பட பணியாற்றி வந்தவர் திரு. விஜயகுமார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக காவல்துறை அதிகாரிகளுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உரிய விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் நிலையில் பிரச்னைகளுக்கு தற்கொலை ஒன்றே தீர்வு அல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும். அதே நேரத்தில் காவல்துறையில் நிலவும் பணி சுமையை குறைக்கவும், காவல்துறையினருக்கு உரிய ஓய்வு அளிக்கவும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை காவல்துறையினருக்கு உரிய உடல், மன நல ஆலோசனைகள் வழங்கவும் தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தருணத்தில் வலியுறுத்துகின்றேன்.

தென்னகத்தின் அம்பேத்கர் எனப் போற்றப்படும் இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று. அப்போதைய சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிகட்சி அரசில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை வலியுறுத்தும் அரசாணை வெளிவர காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி மகாத்மா காந்தி தமிழ் மொழியை அறிந்து கொள்வதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். பட்டியலினத்தவர்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள். அவரது பிறந்தநாளில் பட்டியலினத்தவர்களின் உரிமைகளை எக்காரணத்தைக் கொண்டும் நீர்த்துப்போகாமல் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் ஆய்விற்காக ஏற்படுத்தப்பட்ட குழு, முன்பே திட்டமிடப்பட்ட முடிவுகளை மனதில் வைத்துக்கொண்டு, பெயரளவுக்கு ஓர் ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக வந்த செய்தியை அறிந்து, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயகமுறையில் போராடிய கிராம மக்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பரந்தூர் விமான நிலைய பகுதியில் உள்ள நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்தும், அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்தும் ஆராய அரசால் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் முறையான வகையில் ஆய்வை மேற்கொள்ளாமல் ஒப்புக்கு ஆய்வை நடத்தவுள்ளதாக வந்த செய்தியை அறிந்து, பரந்தூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் பரந்தூர்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஊர்வலமாக செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளின் காவலராக காட்டிக் கொண்ட முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமானநிலைய திட்டத்தை செயல்படுத்த ஒற்றை காலில் நிற்பதும், இத்தனை நாட்களாக போராடிவரும் மக்களை உதாசீனப்படுத்துவதும், விமான நிலையத்திற்கு மாற்று வழிகளைப் பற்றி சிந்திக்க மறுப்பதும் ஏன் என அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆகவே, பரந்தூர் மக்களும் தமிழ்நாட்டு மக்கள் தான், வேற்று கிரக வாசிகள் அல்ல என்பதை முதலமைச்சர் அவர்கள் உணர்ந்து அவர்களது போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதோடு, ஜனநாயக முறையில் போராடியவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவித்திட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.