தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். மின் கட்டண உயர்வால் அதிகளவு பாதிப்பைச் சந்தித்திருக்கும் நூல் உற்பத்தி ஆலைகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருப்பதால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, அதனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் பொருளாதார மந்தநிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை என ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை முற்றிலும் முடங்கும் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக தொழில் அமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளான நிலைக்கட்டண உயர்வு மற்றும் உச்ச நேர மின் கட்டணத்தை ரத்து செய்து தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி கோரியிருக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட திருவாடனை, முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி ஆகிய 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை ரூ.675 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே தோண்டப்பட்டிருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க முயற்சிப்பது மாநிலத்தின் இயற்கை வளங்களை முற்றிலுமாக அழிப்பதற்கு சமமாகும். ஏற்கனவே வறட்சி மிகுந்த மாவட்டமாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை மேலும், பாலைவனமாக்க முயற்சிக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் அபாயகரமான இத்திட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கோரியிருக்கும் அந்நிறுவனத்தின் விண்ணப்பத்தை நிராகரிப்பதோடு, காவிரி படுகை ராமநாதபுரம் மாவட்டம் வரை நீள்கிறது என்பதை உணர்ந்து, அம்மாவட்டத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் கொண்டு வந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் மதன்குமாரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மதன்குமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விடுதியின் மேற்கூரையில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மாணவர் மதன்குமார் உயிரிழந்திருக்கலாம் என ஜார்கண்ட் மாநில காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது இருப்பினும் மருத்துவ மாணவர் மதன்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மதன்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. காளையார்கோவில் தாலுக்காவுக்கு உட்பட்ட பகுதிகளான ஏனாவரம், புதுப்பட்டி பகுதிகளில் அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் படி அங்கு சென்ற வி.ஏ.ஓ திரு. சேகர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ படுகொலை கொலை, திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி வி.ஏ.ஒ மீது கொலைவெறித் தாக்குதல் ஆகிய சம்பவங்களை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஏ.ஓ மீது தாக்குதல் என தொடர்கதையாகி வரும் தாக்குதல் சம்பவங்களின் மூலம், மணல் திருட்டை தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உறுதியாகிறது. சிவகங்கை தொடங்கி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகள் மீதே தாக்குதல் நடத்தப்படும் சம்பவம், நேர்மையான அதிகாரிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மணல் திருட்டு விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி, மணல் அள்ளுவதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதோடு, அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் நாள்தோறும் நிலவும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பட்டியலினத்தவர் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு அலட்சியப் போக்கில் செயல்படுவது கண்டனத்திற்குரியது. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்த கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதல் திருமணம் செய்து மூன்றே நாட்கள் ஆன புதுமண தம்பதியை வீட்டிற்குள் நுழைந்து அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்த இந்த சம்பவங்களால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே பள்ளிகளில் தொடங்கி அனைத்து இடங்களிலும் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராள புழக்கமே முக்கிய காரணம் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாதி ரீதியிலான குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்துவதும்; பொதுமக்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தீமை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அரசின் கடமை என்பதை இனியாவது திமுக அரசு உணர வேண்டும். எனவே, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்துவதோடு, இந்த இரண்டு கொடூர சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரி தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டு அவர் ஆற்றிய தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழக ஆளுநர் அவர்களை வலியுறுத்துகிறேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவைக் குழுவில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஆளுநர் அவர்கள் கையெழுத்திட மறுப்பது சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். இந்திய சுதந்திரத்திற்காக, விவசாயிகளுக்காக, அடித்தட்டு ஏழை மக்களுக்காக, தீண்டாமை கொடுமைக்கு எதிராக என தன் வாழ்நாள் முழுவதையுமே போராட்டம் நடத்தியும் சிறைக்கு சென்றும் கழித்த தோழர் சங்கரய்யா அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு கௌரவ பட்டம் வழங்கும் கோப்பில் உடனடியாக கையெழுத்திடுமாறு ஆளுநர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து நேரடியாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடம் பிரச்னைக்குரிய அரசாணை எண் 149ஐ ரத்து செய்வதற்கான வாக்குறுதியை அளித்துவிட்டு தற்போது அதே அரசாணையின் படி 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்திருப்பது ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். திமுக தேர்தல் அறிக்கை எண் 177ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றத் தயங்குவது ஏன்? என்ற கேள்வியையும் ஆசிரியர்கள் எழுப்புகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கும் நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பாகவே கூடுதல் கவனம் செலுத்தி, மீண்டும் ஒரு போட்டித் தேர்வு என்ற நடைமுறையை ரத்து செய்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.