தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளை பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனுக்கு இணை ஏதுமில்லை எனக்கூறி இறைவனின் விருப்பத்தையே தன் விருப்பமாக கொண்டு வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தன்னலமற்ற தியாக வாழ்க்கையின் மேன்மையைப் போற்றுவதே இந்த பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த இறைதூதரின் புனிதத்தையும், அரும்பெரும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் இந்நாளில் சாதி, மத மற்றும் இன வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய நாளில் உலகெங்கும் அன்பு, அமைதி, சமதானம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்வியின் பிறந்தநாள் என்ற நூலுக்காக பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் திரு.யூமா வாசுகி அவர்களுக்கும், விஷ்ணு வந்தார் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் இளம் எழுத்தாளர் லோகேஷ் ரகுமான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தனித்துவமிக்க மொழிநடையால் தமிழ் எழுத்து உலகில் தலைசிறந்த எழுத்தாளர்களாக திகழும் திரு.யூமா வாசுகி மற்றும் திரு.லோகேஷ் ரகுமான் ஆகிய இருவரின் விருதுப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.

திருச்சி எஸ்.ஆர்.எம் நட்சத்திர விடுதியை உள்நோக்கத்துடன் மூட முயற்சிக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் 30 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு.பாரிவேந்தர் அவர்களின் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் நடத்தப்படும் நட்சத்திர விடுதிக்குள், காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து காலி செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கான குத்தகை காலத்தை நீட்டிக்கக் கோரி அந்நிறுவனம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஹோட்டலை சட்டவிரோதமாக திமுக அரசு மூட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மாநிலத்தின் உரிமை மற்றும் மக்கள் நலனைப் பற்றி சிறிதும் சிந்திக்காத திமுக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தை இதுபோன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக மட்டுமே வாடிக்கையாக பயன்படுத்தி வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் உத்தரவு வரும் வரை திரு.பாரிவேந்தர் அவர்களின் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் நடத்தப்படும் நட்சத்திர விடுதி மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழக அரசையும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தையும் வலியுறுத்துகிறேன்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனும் பெயரில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.6,100 கோடி ரூபாய் முதலீடுகளும் அதன் மூலம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் தமிழக அரசு செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. அதே போல கடந்த ஜனவரி மாதம் திமுக அரசு நடத்திய விளம்பர மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், அதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் அந்த மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கியதாகவோ, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டதாகவோ தற்போதுவரை எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை. முந்தைய ஆட்சிக்காலத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளை காகிதப் பூ என விமர்சித்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்காலத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் அனைத்தும் மாநிலத்திற்கும் மக்களுக்கும் ஒருபோதும் பயன் தராத விளம்பரப் பூ என்பதை எப்போது உணர்வார்? என பொதுமக்களும் தொழில்துறையினரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு வந்த சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம், எளிதில் அணுக முடியாத அரசு நிர்வாகம், தொழில் தொடங்க அடிப்படை கட்டமைப்பு இல்லாத பெருநகரங்கள், ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் என தங்கள் அரசின் குறைகளை மறைக்க திமுக அரசு நடத்திய விளம்பர மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் வெறும் ஏட்டளவிலேயே இருப்பது கண்டனத்திற்குரியது. எனவே, மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதனால் உருவான வேலைவாய்ப்புகள் குறித்தும், கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டால் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் வெள்ளை அறிக்கையை விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாநாடு என்ற பெயரில் மாயத்தோற்றத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றும் முயற்சிகளை இனியாவது கைவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, முதலீடுகள் தேடி வரும் மாநிலமாக தமிழகத்தை மாற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். குவைத் தீ விபத்தில் தமிழர்கள் இருவர் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.