திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கும், பெண் பணியாளர்களுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக துறைத்தலைவர்கள் மீது புகார் – கல்லூரி மாணவிகளே புகார் அளித்த பின்பும் குறைந்தபட்ச விசாரணையைக் கூட நடத்த தயங்குவது யாரை பாதுகாப்பதற்காக ? திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும், பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அக்கல்லூரியைச் சேர்ந்த பொறுப்பு முதல்வர் மீதும், பல்வேறு துறைகளின் தலைவர்களின் மீது மாணவிகளே அளித்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, துணைமுதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என அனைவருக்கும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்திருக்கும் நிலையில், அந்த புகாரின் மீது குறைந்தபட்ச விசாரணையை கூட நடத்த மறுப்பது யாரை பாதுகாப்பதற்காக ? என்ற கேள்வி எழுந்துள்ளது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு நடைபெற்றிருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, தற்போது திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் எழுந்திருக்கும் இந்த புகார், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும், நற்பண்பையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதும், அது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்த பின்னரும் கண்டும் காணாதது போல திமுக அரசு கடந்து செல்வதும் உயர்கல்வி பயிலவே அச்சப்படும் சூழலை உருவாக்கியிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி பொறுப்பு முதல்வர் உட்பட பல்வேறு துறைத்தலைவர்கள் மீது மாணவிகள் அளித்திருக்கும் புகார் மீது தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பத்ம பூஷன் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக துணை பொதுச்செயலாளரும், தென்சென்னை மாவட்ட கழக செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு.G.செந்தமிழன், கழக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் சமூக நல வாரிய தலைவருமான செல்வி.C.R.சரஸ்வதி, கழக அமைப்பு செயலாளரும், கழக பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ம.கரிகாலன், வடசென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.P.ஆனந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

மதுரை மாவட்டம் மேலூரில் கட்டிமுடிக்கப்பட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராத புதிய பேருந்து நிலையம் – பொதுமக்கள் நலனில் அலட்சியம் காட்டும் திமுக அரசு நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் மேலூரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகள் முழுமையாக முடிந்த பின்னரும் திறக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால், பள்ளிக்குழந்தைகள் தொடங்கி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினருமே வெயிலிலும், மழையிலும் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 6.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் மதுரை மேலூரில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு.மன்மோகன்சிங் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பெரும்பங்கு வகித்த திரு.மன்மோகன் சிங் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஆயிரக்கணக்கான உயிர்களையும், கணக்கிலடங்காத உடமைகளையும் பறித்துச் சென்று ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் எக்காலத்திற்கும் அழியாத வடுக்களாக பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டதன் நினைவு தினம் இன்று. ஆண்டுகள் பல கடந்தாலும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தற்போது வரை மீண்டு வர முடியாத நிலையிலும், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலாலும், அராஜகத்தாலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழக மீனவ மக்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, அவர்களின் மேம்பாட்டிற்கு தேவையான நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திட முன்வர வேண்டும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.