அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி – சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுப்பதே ஒரே தீர்வாக அமையும். அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுக்க முற்பட்ட காவலர்கள் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளை தொடர்பான பொதுமக்களின் புகார்களை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, மணல் கொள்ளையை தடுக்க முயலும் காவலர்களையே கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ திரு.லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிவகங்கை, அரியலூர் என பல்வேறு மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, காவலர்களை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, இனிவரும் காலங்களில் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்து அவமானப்படுத்தியிருக்கும் இலங்கை அரசின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது – இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். இராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை உரிய காலத்திற்குள் செலுத்தவில்லை எனக்கூறி மொட்டையடித்து, கைதிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை கழுவுமாறு நிர்பந்தித்திருக்கும் இலங்கை சிறைத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்காததன் விளைவே தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்தும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக மீனவர்களை மனிதநேயமற்ற முறையில் கொடுமைப் படுத்தியிருக்கும் இலங்கை கடற்படைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, இனிவரும் காலங்களில் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலின்றி தமிழக மீனவர்கள் தங்களின் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.