அடிப்படை வசதிகளின்றி அவலநிலையில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளால் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் பாதிப்பு – பள்ளிக்கல்வித்துறையை அதளபாதாளத்திற்கு தள்ளிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று நேரடியாக ஆய்வு நடத்தியதின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் Annual Status Of Education Report எனும் ஆய்வறிக்கையில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் குறித்தும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் குறித்தும் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 30 மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவியர்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட ஆய்வில் மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை விட தமிழகத்தின் கல்வித்தரம் அதளபாதாளத்திற்கு சென்றிருப்பது உறுதியாகிறது. அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை விகிதத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டு கணிசமாக குறைந்திருப்பதோடு, பல பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான குடிநீர், வகுப்பறைகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அரசுப்பள்ளிகளில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் வகுப்பறைகளை சீரமைப்பதோடு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களில் 64 சதவிகிதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை கூட பயில முடியாத அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது. எனவே, இனியும் அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றாமல், ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அரசுப்பள்ளிகளில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பி மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@tnschoolsedu

பிறப்பிலேயே தான் ஒரு ஜனநாயகவாதி என பிரகடனப்படுத்தி, இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் வலிமையோடு நிமிர்ந்து நிற்கச் செய்த தேசத்தந்தை, ஆங்கிலேயர்களின் ஆட்சியை அடியோடு அகற்றிய சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று. பொதுநலச் சேவைக்காக சத்தியாகிரகத்தையும், ஒத்துழையாமை இயக்கத்தையும் சுதந்திர போராட்டத்தில் புகுத்தி வெற்றி கண்டதோடு, நாடு லட்சிய பூமியாக மாற வேண்டும் என்ற கொள்கை பிடிப்பு கொண்டிருந்த மகாத்மா காந்தியடிகளின் தியாகத்தை நினைவில் வைத்து போற்றுவோம்.

திமுக கொடி கட்டிய காரில் வந்து இளம்பெண்ணிடம் ரகளை செய்த மதுபோதைக் கும்பல் – முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் சர்வாதிகாரியாக மாறுவது எப்போது ? சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம், அப்பகுதியாக திமுக கொடி பொருத்திய காரில் வந்த மதுபோதை கும்பல் தகராறில் ஈடுபட்டிருப்பதோடு, துரத்திச் சென்று மிரட்டியது போலவும் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் தொடங்கி, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் வரை திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் தொடர்பில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவிற்கு நாளுக்கு நாள் திமுகவினர் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக புகார் எழுந்துள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையிலும், திமுகவினரும், அக்கட்சியின் அனுதாபிகளும் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது, அச்சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலை வழங்கும் NVS-02 செயற்கைக்கோளை GSLV-F15 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். GSLV-F15 மூலம் தனது 100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர்ந்து விண்வெளி உலகில் இந்தியா புதிய உச்சத்தை தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.