தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு. சகாயம் அவர்கள் புகார் – தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலை திமுக அரசும் அதன் முதல்வரும் புரிந்து கொள்வது எப்போது ? ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்களுக்கு வழங்கப்பட்ட காவல் பாதுகாப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி விலக்கப்பட்ட நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசு வழக்கறிஞருக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தூத்துக்குடி மாவட்டம், மொறப்பநாடு VAO திரு.லூர்து பிரான்சிஸ் அவர்கள் கொலையில் தொடங்கி புதுக்கோட்டையில் ஜகபர் அலி அவர்கள், திருநெல்வேலியில் ஜாஹிர் உசேன் அவர்கள் என தன்னலம் கருதாது இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படும் நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்கள் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் எழுதியிருப்பது தமிழகத்தில் எத்தகைய அசாதாரண சூழல் நிலவுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. மாவட்ட ஆட்சியராக, பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளராக, சட்ட ஆணையராக திறம்பட பணியாற்றியதோடு பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பை தன்னிச்சையாக விலக்கியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.சகாயம் அவர்களுக்கு விலக்கப்பட்ட காவல் பாதுகாப்பை உடனடியாக வழங்குவதோடு, விளம்பர மோகத்தை சிறிதுகாலம் ஒதுக்கிவைத்துவிட்டு தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

ஈரோடு அருகே தோட்டத்து இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியினர் அடித்துக் கொலை – தமிழ்நாட்டின் அமைதியை அடியோடு சீர்குலைத்திருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள்.ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினரை அடித்துக் கொலை செய்த அடையாளம் தெரியாத கும்பல், நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த ஆண்டு பல்லடம் அருகே மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடங்கி அடுத்தடுத்து திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததே தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை நடைபெறுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு குற்றச்சம்பவங்களின்றி அமைதிப் பூங்காவாக திகழ்வதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் முழங்கிய அடுத்த இரு தினங்களில் நடைபெற்றிருக்கும் இரட்டைக் கொலை தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதோடு தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பழிவாங்கல், ஆதாயக் கொலை, முன்விரோதம் என அடுக்கடுக்கான காரணங்களை கண்டறிந்து சமாளிக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திருப்பூர், கோவை மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்களுக்கு என்ன காரணம் சொல்ல காத்திருக்கிறார் ?எனவே, காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி இக்குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

93 ஆண்டுகளுக்கு பிறகு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு – மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதி வாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதலை வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது. மக்கள் அனைவரின் சமூக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்துவதற்கு அடிப்படையான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நேரத்தில், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் புள்ளி விவரங்களுடன் கூடிய வலுவான வாதங்களை முன்வைப்பதற்கு உதவக்கூடிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த முடிவு செய்திருக்கும் மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71வது இளைய பீடாதிபதியாக இன்று பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் நல்லாசியோடு இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் புகழ்பெற்ற காஞ்சி மடத்தின் சமூக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான பணிகளை மேலும் பல்லாண்டுகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்போர் விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உடல் உழைப்பின் மேன்மையையும், உழைப்பாளர்களின் மகத்துவத்தையும் உலகிற்கு உணர்த்தும் இந்நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, உழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்றி, சில முதலாளிகளின் கோரப்பிடியில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த உழைக்கும் வர்க்கம், ஒன்றுகூடி ஆர்ப்பரித்து போராடி தங்களின் உரிமைகளை வென்றெடுத்த இந்த மே தினத் திருநாள் ”உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்” என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. “உழைப்பிற்கு என்றும் உயர்வு” என்ற வாக்கை மனதில் நிலை நிறுத்தி ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பு – பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ?சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் இடர்பாடுகளில் சிக்கியிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்தியாவின் மொத்த பட்டாசுகளில் சரி பாதிக்கும் மேலாக உற்பத்தி செய்யப்படும் சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.சிவகாசியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் சிக்கி நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கும் நிலையிலும், பட்டாசு ஆலை தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை திமுக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தாததே அடுத்தடுத்த உயிரிழப்புகளுக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி பட்டாசு ஆலை விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வை மேற்கொண்டு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ திரு.கஸ்தூரி ரங்கன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் உட்பட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானி திரு.கஸ்தூரி ரங்கன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.