நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் கூட்டுறவு நிறுவனங்களிடம் முதல்வர் மருந்தகங்களை திறக்கச் சொல்லி நெருக்கடி கொடுப்பதா ? – மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களுக்கு முழுவதும் மூடுவிழா நடத்தத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் இடம் பெற்றிருந்த பொங்கல் பண்டிகை முதல் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வரை நடைமுறைக்கு வராத நிலையில், உடனடியாக அம்மருந்தகங்களை திறக்க கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு நெருக்கடி கொடுப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவதற்கு அரசு மூலம் வழங்கப்படும் மானியம் குறைவாக இருப்பதால் அம்மருந்தகங்களை தொடங்க தனியார்கள் முன்வராத நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி கடும் கண்டனத்திற்குரியது. தரமான மருந்துகளை, குறைவான விலையில் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் 2014 ஆம் ஆண்டு இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா மருந்தகங்களுக்கு படிப்படியாக மூடுவிழா நடத்திவிட்டு முதல்வர் மருந்தகங்களை திறக்க முடிவு செய்திருப்பது அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வரும் கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம், மின்கட்டணம் போன்ற செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் கூட்டுறவு நிறுவனங்களிடம் முதல்வர் மருந்தகங்களை உடனடியாக திறக்கச் சொல்லி நிர்பந்திப்பது அந்த கூட்டுறவு நிறுவனங்களை முற்றிலுமாக முடக்கும் செயலாகும். எனவே, அம்மா மருந்தகங்களுக்கு முழுவதுமாக மூடுவிழா நடத்தும் முடிவோடு கொண்டு வரப்படும் முதல்வர் மருந்தகம் திட்டத்தை உடனடியாக கைவிடுவதோடு, ஏற்கனவே இயங்கி வரும் அம்மா மருந்தகங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கி அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்க முன்வர வேண்டும் என கூட்டுறவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கோவை – திருப்பதி ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் – சர்வ சாதாரணமாகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது திமுக அரசு? கோவையிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் அத்துமீறி நுழைந்த இருவர், அதில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, தன்னைக் காப்பாற்றக் கூறி கூச்சலிட்ட பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. நேற்று ஒரே நாளில், கோவை மேட்டுப்பாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது சிறுமி, திருச்சியில் பள்ளித் தாளாளரின் கணவரால் பாலியல் துன்புறுத்தப்பட்ட 4 வயது குழந்தை, கடலூரில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் தொந்தரவுக்குள்ளான 16 வயது சிறுமி என அடுத்தடுத்து நடைபெற்றிருக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களுக்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்? குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் சிறிதளவும் அக்கறையற்ற திமுக அரசால், அரசுப் பள்ளிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்து என அனைத்து இடங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, கடுமையான சட்டங்களை கொண்டுவந்த பிறகும் தினந்தோறும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றச்சம்பவங்களை அடியோடு தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சரையும், அவர் வசம் இருக்கும் காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

சிவகங்கை அருகே காவல்நிலையத்திற்குள் புகுந்து பெண் காவல் உதவியாளர் மீது தாக்குதல் – சம்பவத்திற்கு காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் காவல்நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. காவல்நிலையத்திற்குள் புகுந்து பணியிலிருக்கும் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் மீது நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் பணியில் ஈடுபட்டுள்ள தன் மகளுக்கு காவல்நிலையத்திலேயே பாதுகாப்பில்லை எனக்கூறி கதறி அழும் பாதிக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரின் தாய்க்கு காவல்துறை என்ன பதில் சொல்லப் போகிறது ? தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக பெண் காவல் உயர் அதிகாரி ஒருவர் அளித்த புகார் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே காவல்நிலையத்திற்குள் பெண் காவல் ஆய்வாளர் மீது நடைபெற்றிருக்கும் தாக்குதல் சம்பவம் தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு துளியளவும் பாதுகாப்பில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது. எனவே, சிவகங்கையில் காவல்நிலையத்திற்குள் புகுந்து பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களை காக்கும் நோக்கில் காவல்துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.