வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் மந்த கதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்டிருக்கும் பள்ளங்களில், மழைநீர் தேங்குவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பல இடங்களில் வடிகால் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் முறையான அறிவிப்பு பலகைகளோ, பாதுகாப்பு தடுப்புகளோ வைக்கப்படாத காரணத்தினால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பதோடு, பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் முறையான அறிவிப்பு பலகைகள் மற்றும் தடுப்புகள் வைத்து விபத்தை தடுக்கும் வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவின் நம்பிக்கையாக திகழ வாழ்த்துகிறேன். அதே போல யூரோப்பில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 4048 பேருக்கும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 300க்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் நாளிதழ்களில் வெளியாகி இருக்கும் செய்தி வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதனை உருவாக்கும் ஏடிஸ் கொசுவை ஒழிப்பது தான் ஒரே வழி என்பதை உணர்ந்து கொசு ஒழிப்பு பணியை தமிழ்நாடு முழுவதும் அரசு தீவிரப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் வருவோருக்கு டெங்கு பரிசோதனையை மேற்கொள்ள ஏதுவாக பரிசோதனை கருவிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் டெங்கு உறுதி செய்யப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டுகளை உருவாக்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை கணக்கெடுத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதோடு, டெங்கு தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.