நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த குடியரசு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு சுதந்திரமடைந்த பின் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக அமலுக்கு வந்த இந்நாளை குடியரசு தினமாகக் கொண்டாடி மகிழும் வேளையில், ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய் நாட்டை மீட்கும் சுதந்திரப் போராட்டத்தில் தன்னுயிர் நீத்த தியாகிகள் அனைவரையும் நினைவில் வைத்துப் போற்றுவோம். நாட்டு மக்கள் அனைவரும் மனமுவந்து கொண்டாடும் இந்த குடியரசுத் திருநாளில் சாதி, மதம், மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திடவும், இந்தியத் திருநாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பேணிக்காத்திடவும் நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம் எனக்கூறி மீண்டும் ஒருமுறை குடியரசு தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பத்மபூஷன் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் மருத்துவர் திரு.கே.ஆர் பழனிசாமி, தொழிலதிபரும் சமூக சேவகருமான திரு. எஸ்.கே.எம். மயிலானந்தம் அவர்கள், விளையாட்டு வீரர் திரு. விஜய் அமிர்த ராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல, பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் மருத்துவர் திரு.ஹெச்.வி. ஹண்டே அவர்கள், சென்னை ஐஐடி இயக்குநர் திரு.காமகோடி அவர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி திரு. விஜயகுமார் அவர்கள், இசைக்கலைஞர்கள் திருமதி. காயத்ரி பலசுப்பிரமணியன்& திருமதி. ரஞ்சனி பாலசுப்பிரமணியன் அவர்கள், நடிகர் திரு. மாதவன் அவர்கள், கல்வியாளர் திரு. ராமசாமி அவர்கள், கல்வியாளர் திருமதி சிவசங்கரி அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறேன். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் அனைவரும், அவரவர் துறைகளில் மேன்மேலும் சிறந்து விளங்கிட மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

திருநெல்வேலி அருகே ஒரே இடத்தில் 20 கல்குவாரிகளை அமைத்து கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாகப் புகார் – கனிமவளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டிய திமுக அரசு அதனை ஊக்குவிப்பது கடும் கண்டனத்திற்குரியது.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் அடுத்தடுத்து செயல்படும் 20 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்திற்கு வெடிவைத்துத் தகர்த்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் கல்குவாரிகள் மூலம் அண்டை மாநிலங்களுக்குக் கனிமவளங்களைக் கடத்தும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்கதையாகி வருவதால் அப்பகுதிகளின் விளைநிலங்களோடு, நிலத்தடி நீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.சட்டவிரோத குவாரிகளோடு, உரிமம் பெற்ற குவாரிகளிலிருந்தும் கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அரசு நிர்வாகத்துறைகளோ, பல்வேறு புகார்கள் குவிந்த பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்க மறுப்பதன் மூலம், ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் தனது பங்கிற்குக் கனிமவளக் கொள்ளையை ஊக்குவிக்கிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தென் மாவட்டங்களில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமவளக் கொள்ளையைத் தடுத்து இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு, இருக்கன்துறையில் ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் இந்த 20 குவாரிகளில் உடனடி ஆய்வை மேற்கொண்டு கனிமவளம் கடத்தப்பட்டிருப்பது உறுதியானால் தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் திரு.புண்ணியமூர்த்தி நடேசன் அவர்கள், ஓதுவார் திருத்தணி திரு. சுவாமிநாதன் அவர்கள், குரும்பா ஓவியர் திரு ஆர். கிருஷ்ணன் அவர்கள், சிற்பக் கலைஞர் திரு. காளியப்ப கவுண்டர் அவர்கள், மிருதங்க கலைஞர் திரு. பக்தவத்சலம் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அனைவரும் அவரவர் துறைகளில் மேன்மேலும் பல சாதனைகள் புரிந்து உச்சம் தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.

கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.S.V.S.P.மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.