தன் வாழ்நாளில் பெரும்பாலான பகுதியை இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த குடியரசு முன்னாள் தலைவர், ஏவுகனை நாயகன் பத்மபூஷன் திரு.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று. நல்ல பழக்கவழங்கங்கள் நமது எதிர் காலத்தை மாற்றும் எனவும் கனவு காணுங்கள்… ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் நாடு முழுவதும் மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அக்னி, பிருத்வி, பிரமோஷ் என அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் படைப்புகள் அனைத்தும் இன்றளவும் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நல்வழியை காட்டும் அப்துல்கலாமின் லட்சியப் பாதையில் சென்று அவரது கனவான வளமான இந்தியாவை உருவாக்குவோம் என அவர் பிறந்த இந்நாளில் உறுதியேற்போம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஆயக்குடி அருகே தொடர்ந்து அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வி.ஏ.ஓ திரு. கருப்பசாமி மற்றும் அவரின் உதவியாளர்கள் மீது மணல் கடத்தலில் ஈடுபட்ட சிலர் லாரியை ஏற்றி கொலை முயற்சி செய்ய முற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டின் வி.ஏ.ஓ கொலை செய்யப்பட்டதன் சுவடே இன்னும் மறையாத நிலையில், மீண்டும் ஒரு கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியதாக வரும் செய்தி அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எடுத்துக்காட்டாக அமையும் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் 83 இடங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளின் படி அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்பட்ட 800க்கும் அதிகமான இடங்களில் 83 மருத்துவ இடங்கள் நிரப்பபடாமலே இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 4 கட்ட கலந்தாய்வுகள் நிறைவடைந்த பிறகும் 83 மருத்துவ இடங்கள் நிரப்பபடாமல் இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த 83 மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தும் அவை நிரப்பப்படாத காரணத்தினால் ஏழை, எளிய மாணவர்கள் பலர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவம் படிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப் படாமல் இருக்கும் காலியிடங்களைத் திரும்ப வழங்க மாட்டோம் என உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாட்டிற்கான 83 மருத்துவ இடங்கள் மீண்டும் கிடைப்பதை உறுதி செய்வதோடு, வரும் காலங்களில் இதுபோன்று நிரப்பபடாமல் இருக்கும் மருத்துவ இடங்களை முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.